வி.ஐ.பி தொகுதி – 6 : சிதம்பரத்தில் சிறுத்தைக்கு சிக்கல்! கை கொடுக்குமா கூட்டணி கணக்கு !?

 

வி.ஐ.பி தொகுதி – 6 : சிதம்பரத்தில் சிறுத்தைக்கு சிக்கல்! கை கொடுக்குமா கூட்டணி கணக்கு !?

சிதம்பரம் :

சிதம்பரம் தனித்தொகுதி ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது.காங்கிரஸ் இந்தத் தொகுதியில் ஆறு முறை வென்றிருக்கிறது.அதில் வள்ளல் பெருமான் மட்டுமே மூன்று முறை வென்றிருக்கிறார்.அதன் பிறகு சிதம்பரம் தி.மு.க-வின் கைகளுக்கு மாற தி.மு.க-வும் 4 முறை இந்தத் தொகுயை கைப்பற்றியிருக்கிறது.

அடுத்தபடியாக பா.ம.க இங்கே மூன்று முறை வென்றிருக்கிறது.கடந்த முறை மட்டுமே அ.தி.மு.க-வின் சந்திரகாசு முதன் முறையாக வென்றார்.இப்போது அ.தி.மு.க சார்பில் அரியலூர் பொய்யாதநல்லூர் அண்ணா நகரைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் பெ.சந்திரசேகர் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.எம்.ஏ பட்டதாரியான சந்திரசேகர் சென்னை கோயம்பேடு மார்கெட் வியாபாரி.

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் இப்போது ஐந்தாவது முறையாக சிதம்பரம் தொகுதியில் நிற்கிறார்.இதுவரை ஒரு முறை மட்டுமே சிதம்பரத்தில் வென்றிருக்கும் திருமாவளவன், இந்த முறையும் கடும் போட்டியை சந்திக்கிறார். மூன்று மாவட்டங்களில் பரந்திருக்கும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில், குன்னம்,அரியலூர்,ஜெயங்கொண்டம்,புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி இருக்கின்றன.

இதில் காட்டு மன்னார் கோவில் தனித்தொகுதி என்பது குறிப்பிடதகுந்தது. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க ,வி.சி.க இரண்டுமே இங்கு பலமான கட்சிகள் அல்ல! காங்கிரஸ், தி.மு.க,பா.ம.க காட்சிகள் மட்டுமே இங்கு பலமான வாக்கு வங்கி வைத்திருப்பவை.

கடந்த தேர்தலில் பா.ம.க இங்கு தனித்து நின்றே இரண்டு லட்சத்துக்கு மேல் ஓட்டு வாங்கி இருந்தது. அந்த பலத்துடன் இறங்கி இருந்தாலும் சந்திரசேகர் புதியவர். மாறாகத் திருமாவளவன் நன்கு அறிமுகமானவர். சிறந்த பேச்சாளர். ஆனால், இவருக்கு உடன் பிறப்புகளும் காங்கிரஸ் தொண்டர்களும் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருவார்கள் என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும். 

சிதம்பரம் தொகுதி

போதாதற்கு தேர்தல் கமிஷன் வேறு வி.சி.க கேட்ட சின்னங்களை எல்லாம் மறுத்துவிட்டு பானை சின்னத்தை கொடுத்திருக்கிறது. இதை வாக்காளர்களிடம் கொண்டு சேர்ப்பதும் முக்கிய பிரச்சினையாக இருக்கும். காடுவெட்டி குருவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி இது. அவரது மறைவும் இந்தத் தேர்தலின் முடிவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். 

பா.ம.க தலைவர் மீதும், சின்னையா மீதும் கோபத்தில் இருக்கும் காடு வெட்டி குருவின் குடும்பமும் அவரது சொந்த பந்தங்களும் கணிசமான ஓட்டை பிரிப்பார்கள்.அது தொல். திருமாவளவனுக்கு சாதகமாக அமையும்! இதையெல்லாம் தாண்டி,சிறுத்தைகளின் கடும் உழைப்பாலும், தி.மு.க-கூட்டணி கட்சி ஆட்களின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம், இல்லாவிட்டால் சிறுத்தைக்கு சிதம்பரத்தில் சிக்கல்தான் என்பதே இன்றைய நிலை!