விஸ்வாசம் அடுத்து அமிதாப் பச்சன் ரோலில் தல அஜித்: வெளியான அறிவிப்பு; ரசிகர்கள் உற்சாகம்!

 

விஸ்வாசம் அடுத்து அமிதாப் பச்சன் ரோலில் தல அஜித்: வெளியான அறிவிப்பு; ரசிகர்கள் உற்சாகம்!

விஸ்வாசம் படத்தை அடுத்து பிங்க் பட ரீமேக்கில் நடிகர் அஜித் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: விஸ்வாசம் படத்தை அடுத்து பிங்க் பட ரீமேக்கில் நடிகர் அஜித் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களை அடுத்து 4-வது முறையாகச் சிவா – அஜித் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் விஸ்வாசம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார்.டி.இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்ட அஜித் தற்போது அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அதே நேரத்தில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய இயக்குநர் எச்.வினோத்தின் அடுத்த படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான பிங்க் படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றது. மேலும் இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பலரும் பாராட்டியிருந்தனர்.

தமிழில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளார். இதை ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் சூஜித் சிர்கார் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அஜித் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்தை அடுத்த வருடம் வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை இன்னும் சில நாட்களில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி செய்வார் என்றும் சூஜித் சிர்கார் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.