விஸ்வரூபம் எடுத்த சின்மயி லீக்ஸ்: 7 கர்நாடக இசை கலைஞர்கள் அதிரடி நீக்கம்!

 

விஸ்வரூபம் எடுத்த சின்மயி லீக்ஸ்: 7 கர்நாடக இசை கலைஞர்கள் அதிரடி நீக்கம்!

சென்னை: #Metoo- வில் சிக்கிய 7 கர்நாடக இசைக் கலைஞர்களை மெட்ராஸ்  மியூசிக் அகாடமி மார்கழி மாத கச்சேரியில் இருந்து நீக்கியுள்ளது.

மீடூ என்ற ஹேஷ்டேக்கின் மூலம் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தாக்குதல்கள் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து பிரபல பாடகி சின்மயி தனக்கு வைரமுத்து பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்தார் என்று பகீர் குற்றச்சாட்டு ஒன்றைக் கூறியது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இதே போல்  கர்நாடக இசைக்கலைஞர்கள் பலர் மீதும்  குற்றச்சாட்டை  முன்வைத்தார்.

இந்நிலையில் மெட்ராஸ்  மியூசிக் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் கச்சேரியில் இருந்து மீடூவில் சிக்கிய 7 இசைக் கலைஞர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் என். ரவிகிரண், ஓ.எஸ்.தியாகராஜன், மன்னார்குடி ஏ ஈஸ்வரன், ஶ்ரீமுஷ்னம் வி ராஜா ரவ், நாகை ஶ்ரீராம், ஆர் ரமேஷ் மற்றும் திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோரின் பெயர்களில் பல பெண்கள் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பகிர்ந்திருந்தார். 

இது குறித்து  கூறியுள்ள மெட்ராஸ்  மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி,  ‘மீடூ இயக்கத்தின் வெளிப்பாடே எங்களின் இந்த முடிவு. இவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு போடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்தப் பிரச்சினை நடக்கும் போது அமைதியாக இருப்பது சரியாகாது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் எல்லாம் குற்றம் செய்தவர்கள் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் யார் இசைக் கச்சேரியில் பங்கேற்க முடியும் என்பது குறித்து முடிவு செய்யும் உரிமை எங்களுக்கு உண்டு’ என்று தெரிவித்துள்ளார்.