விஸ்வரூபம் எடுக்கும் அலங்கார ஊர்தி விவகாரம்…. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் கோரிக்கைகளும் நிராகரிப்பு… மத்திய அரசு விளக்கம்

 

விஸ்வரூபம் எடுக்கும் அலங்கார ஊர்தி விவகாரம்…. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் கோரிக்கைகளும் நிராகரிப்பு… மத்திய அரசு விளக்கம்

குடியரசு தின விழா அலங்கார ஊர்தி பேரணியில் பங்கேற்பது தொடர்பான மேற்கு வங்கம், மகாராஷ்டிராவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் அலங்கார ஊர்தி கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டதுள்ளதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

தலைநகர் டெல்லியில் ஜனவரி 26ம் தேதியன்று நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மாநிலங்களின் கலாச்சாரங்களை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறும். இந்த அணிவகுப்பில் இடம்பெறுவது என்பது சாதரணம் அல்ல. மாநில அரசுகளின் அலங்கார ஊர்தியின் வடிவமைப்பு, தீம், கரு, அதன் காட்சி தாக்கம் உள்ளிட்டவை நிபுணர்கள் அடங்கிய ஆய்வு கமிட்டி ஆய்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். பின் அதிலிருந்து குடியரசு தின பேரணியில் இடம்பெறும் மாநிலங்களின் அலங்கார ஊர்தி பட்டியல் தயாரிக்கப்படும். 

அலங்கார ஊர்தி

 

இந்த ஆண்டு குடியரசு தின விழா பேரணியில் அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது தொடர்பாக 32 மாநிலங்கள் மற்றும் யூனியன், 24 அமைச்சகங்களிலிருந்து  மொத்தம் 56 கோரிக்கைகள் வந்தன. அதில் 22 விண்ணப்பங்கள் மட்டும் இறுதி  செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்கம், மகாராஷ்டிராவின் அலங்கார ஊர்தி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இது பெரிய பிரச்சனையாக தற்போது வெடித்துள்ளது. அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்பதால் அலங்கார ஊர்தி கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் பொங்கின.

பா.ஜ.க.

ஆனால் மத்திய அரசு அதனை மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், முறையான தேர்வு நடைமுறை காரணமாகத்தான் அந்த மாநிலங்களின் அலங்கார ஊர்தி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆளும் அரியானா, உத்தரகாண்ட், திரிபுரா மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்தி கோரிக்கைகளும்தான் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தன.