விஷ சாராயம் அருந்திய பெண்கள் உள்பட 89 பேர் பலி; அசாமில் சோகம்!!

 

விஷ சாராயம் அருந்திய பெண்கள் உள்பட 89 பேர் பலி; அசாமில் சோகம்!!

அசாம் மாநிலத்தில் விஷ சாராயம் அருந்திய பெண்கள் உள்பட 89 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் விஷ சாராயம் அருந்திய பெண்கள் உள்பட 89 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தின் உள்ள கோல்ஹாட் மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளன. இங்கு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அங்கேயே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது, தொழிலாளர் ஒருவரது வீட்டில் வைத்து ஏராளமான தொழிலாளர்கள் இணைந்து சாராயம் குடித்துள்ளனர். இதையடுத்து, அன்றைய தினம், நள்ளிரவிலேயே பெண்கள் உள்பட ஏராளமானோருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. சிலர் ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.

asaam dead

இதையடுத்து, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்று 17 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகின. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89-ஆக உயர்ந்துள்ளது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதிக்குட்பட்ட கும்ட்டாய் சட்டசபை உறுப்பினர் மிருனாள் சைக்கியா சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டதுடன், சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அசாம் முதல்வரும் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக கலால்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மூலம் டீ எஸ்டேட்டில் சாராயம் காய்ச்சுவது ஒழிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறிவந்த நிலையில், எங்கிருந்து சாராயம் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது.

விஷ சாராயம் அருந்தி பலியான சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.