விஷால் ரெட்டியை விரட்டி அடிப்போம்: தயாரிப்பாளர் சங்கத்தில் போர்க்கொடி?

 

விஷால் ரெட்டியை விரட்டி அடிப்போம்: தயாரிப்பாளர் சங்கத்தில் போர்க்கொடி?

விஷால் ரெட்டியை விரட்டி அடித்து விட்டு, தலைவர்  இடத்தில் பச்சை தமிழரான பாரதிராஜாவை அமர வைப்போம் என்று விஷாலுக்கு எதிராக சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: விஷால் ரெட்டியை விரட்டி அடித்து விட்டு, தலைவர்  இடத்தில் பச்சை தமிழரான பாரதிராஜாவை அமர வைப்போம் என்று விஷாலுக்கு எதிராக சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர்  நடிகர் விஷால் மீது, சில மூத்த தயாரிப்பாளர்களுக்கான பென்ஷன் பணத்தைத் தராமல் நிறுத்திவைத்து அவர்களை கஷ்டப்படுத்துவது, செயற்குழு ஒப்புதல் இல்லாமல் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகையை குறைத்தது, திரையரங்குகளில் உள்ள நவீன தொழில்நுட்பங்களான க்யூப் மற்றும் யு.எப்.ஓ நிறுவனங்களை நீக்குவது, திரைப்படங்களைத் திரையிட அதிக தொகை கொடுக்க வேண்டிய சூழல், படம் ஹிட்டானாலும் முழு பலன்கள் தயாரிப்பாளர்களுக்குச் சென்றடையாமல் இருப்பது  என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து  சிறு பட தயாரிப்பாளர்களை பாதுகாக்கவும், அவர்கள் வளர்ச்சிக்காகவும் சங்க தலைவர் விஷால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி நடிகர்கள் உதயா மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதன் தொடர்ச்சியாக விஷால் மீது பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இதன் உச்சகட்டமாக விஷாலை ‘பிழைக்க இங்கே வந்தவர்’ என்று மொழி ரீதியில் ஒரு தரப்பினர் திட்ட துவங்கியுள்ளனர். ‘விஷால் ரெட்டியை விரட்டி அடித்துவிட்டு, தலைவர்  இடத்தில் பச்சை தமிழரான பாரதிராஜாவை அமர வைப்போம்’ என்று தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பெரும் எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது.

குறிப்பாக சீமான் தெலுங்கர் ஒருவர் தலைமையில் இருப்பதா என்ற ரீதியில் நேரடியாகவே தாக்க துவங்கியுள்ளார். அதே நேரத்தில் விஷாலுக்கு ஆதரவாக ஆர்.கே. செல்வமணி செயல்படுவதாகவும் சிலர் குற்றச்சாட்டி வருகின்றனர். முன்னதாக தயாரிப்பாளர் டி.சிவா, ‘நடிகர் சங்கத்தையும், தயாரிப்பாளர்  சங்கத்தையும் பேலன்ஸ் பண்ணி ஒர்க் பண்ணும் போது, தயாரிப்பாளர் சங்கம் ரொம்ப பாதிக்கப்படுது. அதனால்  விஷால் உடனடியாக பொதுக்குழுவை கூட்டி பதவி விலக வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதனால் நடிகர் சங்கம் ஒரு பக்கம், தயாரிப்பாளர் சங்கம் ஒரு பக்கம் என விஷால் செய்வதறியாமல் திகைத்து போய் உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.