விவசாய கமிஷனை மறக்க 6,000 ரூபாய் வழங்கும் திட்டமா? : செ. நல்லசாமி

 

விவசாய கமிஷனை மறக்க 6,000 ரூபாய் வழங்கும் திட்டமா? : செ. நல்லசாமி

ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கும் திட்டத்தைப் பிப்ரவரி 24 -ஆம் தேதி துவங்கி வைத்த பிரதமர் மோடி, விவசாய கமிஷனை அமல்படுத்துவேன் என்று வாக்கு கொடுத்ததை மறந்துவிட்டார் என  தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் செ.நல்லசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Nallasamy

ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி. இதன் முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள இத்தகைய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 2,000 செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான ‘தேசிய விவசாய கமிஷன்’ பரிந்துரைகளை அமல்படுத்தியிருந்தால், விவசாயிகள் கையேந்தும் நிலையே வந்திருக்காதே, மோடிக்கு விவசாய கமிஷனின் அறிக்கை பற்றி நியாபகம் இருக்கிறதா? என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் செ.நல்லசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடியின் 6,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தலுக்காக விவசாயிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டம் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் முதன்முதலாக விவசாய கமிஷன் அமைக்கப்பட்டது. இந்திய பசுமைப் புரட்சியில் முக்கிய பங்காற்றிய எம்.எஸ். சுவாமிநாதன், 2006-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி தனது இறுதி அறிக்கையை சமர்பித்துவிட்டார். இதை அப்போதைய மத்திய அரசும், அதன்பின் வந்த மத்திய அரசும் செயல்படுத்தி இருந்தால், விவசாயிகள் நிலை மோசமாகியிருக்காது என நல்லசாமி தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதனின் விவசாய கமிஷன் பரிந்துரைகளில் சில பின் வருமாறு

swaminathan

அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச விலையை அரசு தீர்மானிக்க வேண்டும். அந்த விலை, உற்பத்தி செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50 சதவீதம் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் 4 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும்.

வனங்களை ஒட்டி வாழும் மலைவாழ் மக்கள், விவசாயப் பெருங்குடி மக்கள் மாடு மேய்ப்பதற்காகவும், காடுகளைப் பாதிக்காத தொழில்களுக்காகவும் வனத்துக்குள் செல்வதைத் தடுக்கக் கூடாது.

 உச்சவரம்புக்கு மேற்பட்ட நிலங்கள், உபரி நிலங்கள், அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்கள் நிலமற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். 

விவசாயப் பிரதிநிதிகளும் இடம் பெறும் வகையில் மாநில அளவிலான விவசாயிகள் ஆணையங்கள் வேண்டும். 

விவசாய மானியம் அதிகரிக்கப்பட வேண்டும் ஆகியவை பரிந்துரைகளில் முக்கியமானவை.

2014-ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக உத்தரப் பிரதேசத்தில் பேசிய நரேந்திர மோடி, விவசாயிகள் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் அரசு அமல்படுத்தவில்லை. நான் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் இப்போது விவசாயிகளுக்கு ஆட்சி முடியும் தருவாயில் 6,000 ரூபாய் பணம் தருகிறேன் என்கிறார். இதை விவசாயிகள் நினைவில்கொள்ள வேண்டும் என செ. நல்லசாமி கூறுகிறார்.