விவசாயிகள் பேரணியில் கண்ணீர் புகைக்குண்டு, தண்ணீர் பீய்ச்சி அடிப்பு; உ.பி.,-டெல்லி எல்லையில் பரபரப்பு

 

விவசாயிகள் பேரணியில் கண்ணீர் புகைக்குண்டு, தண்ணீர் பீய்ச்சி அடிப்பு; உ.பி.,-டெல்லி எல்லையில் பரபரப்பு

டெல்லி: விவசாயிகளின் பேரணிக்கு போலீசார் மறுப்பு தெரிவித்தால், உத்தரப்பிரதேசம்-டெல்லி எல்லையில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், கரும்பு நிலுவை தொகை, மின்கட்டணத்தில் சலுகை, 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், விவசாய பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய விவசாயிகள் அமைப்பு சார்பில் ஹரித்துவாரில் இருந்து கடந்த 23-ம் தேதி டெல்லிக்குப் பேரணியாக விவசாயிகள் புறப்பட்டனர்.

ஆனால், டெல்லிக்குள் நுழைய விவசாயிகளுக்கு போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்திருந்தனர்.  தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை மாற்றம் செய்ததுடன், உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி மாநில எல்லைக்கு சீல் வைத்தனர்.

எனினும், திட்டமிட்டபடி சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி-உத்தரப்பிரதேசம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று பேரணியாகச் செல்ல முயன்றனர். டெல்லிக்குள் செல்ல முயன்ற விவசாயிகளிடம், தடை உத்தரவை எடுத்துக் கூறி அவர்களை திரும்பிச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், போலீஸாரின் வார்த்தைகளை மீறி விவசாயிகள் பேரணியாகச் செல்ல முயன்றனர். இதனால், விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்றப்பட்டது.

இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், விவசாயிகள் கூட்டத்தை போலீசார் கலைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.