விவசாயிகளின் கண்ணீரை உணர்ந்தவன் நான்.. அவர்களிடம் ஜாதி இல்லை! – கமல் பேச்சு

 

விவசாயிகளின் கண்ணீரை உணர்ந்தவன் நான்.. அவர்களிடம் ஜாதி இல்லை! – கமல் பேச்சு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் அரங்கில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “விவசாயிகளின் கண்ணீரை உணர்ந்தவன் நான். விவசாயி எந்த மொழியைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் ஒன்று தான். அனைத்து விவசாயிகளும் சகோதரர்களே, தோளில் பச்சைத்துண்டு போடாத விவசாயி என்று என்னை சொன்னார்கள். ஆனால் நான் எனது மனதில் பச்சை துண்டு போட்டுள்ளேன். 

10,000 கோடி கடன் வாங்கியவர்கள் எல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள், ஆனால் ஏழை விவசாயி இங்கே சிரமப்படுகிறான். மண்ணுக்கடியில் தங்கமும் வைரமும் இருந்தாலும் அதை அப்படியே விட்டு வைத்து அதன் மீது விவசாயம் செய்யும் சமூகமே வளர்ச்சி அடையும். 

விவசாய நாடு என்று சொல்வதில் அவமானம் இல்லை. அது நமக்கு பெருமை தான். படிப்பை பாதியில் விட்டவன் ஆனால் சோறு நிறைய சாப்பிட்டவன் அதனால் அதிகமாக அறிவு வளர்ந்துள்ளது. 

விவசாயிக்கு ஒரே மதம், அவனுக்கு வேற சாதி இல்லை. இந்த விவசாயக் குடும்பத்தில் நானும் சேர்வதில் எனக்கு பெருமை. மத்திய மாநில அரசு இரண்டுமே விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் எதிரான நிலைப்பாடே கொண்டிருக்கின்றனர். 

அரசு, ஏழைகள் குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் நிதிக்கொள்கை வகுத்து வருகின்றனர். தங்க பிஸ்கட்டிற்கு குறைந்த வரி ஆனால் சாப்பிடும் பிஸ்கட்டிற்கு கூடுதல் வரி. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு விவசாயிகள் நன்றி சொல்லும் காலம் வரும்.

பயிர்காப்பீடு தனி நபர்களுக்கும் வழங்கப்படும் காலம் வரும். அரசு அறிவிப்புகள் மிக சிறப்பாக செய்வார்கள், ஆனால் அதை நிறைவேற்றி உள்ளார்களா? என்பது தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கேள்வி. அது தான் உண்மையான செயல்பாடு” என பேசியுள்ளார்.