விளையாட்டை நிறுத்திக் கொள்ளாவிட்டால் ஆதாரங்களை வெளியிடுவேன்: அமைச்சர் ஜெயக்குமார் ஆடியோ பெண் எச்சரிக்கை

 

விளையாட்டை நிறுத்திக் கொள்ளாவிட்டால் ஆதாரங்களை வெளியிடுவேன்: அமைச்சர் ஜெயக்குமார் ஆடியோ பெண் எச்சரிக்கை

விளையாட்டை நிறுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆதாரங்களை வெளியிடுவேன் என அமைச்சர் ஜெயக்குமார் கர்ப்பமாகியதில் குழந்தை பிறந்ததாக கூறப்படும் இளம்பெண் எச்சரிக்கை விடுத்துள்ளார்

சென்னை: விளையாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆதாரங்களை வெளியிடுவேன் என அமைச்சர் ஜெயக்குமார் கர்ப்பமாகியதில் குழந்தை பிறந்ததாக கூறப்படும் இளம்பெண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இளம்பெண்ணை கர்ப்பமாக்கியதாக அப்பெண்ணின் தாயாரும், அமைச்சரும் பேசுவது போன்ற ஆடியோவும், ஜெயக்குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் குழந்தை பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழும் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார். இதனிடையே, வழக்கறிஞர் ஒருவர், அமைச்சர் ஜெயக்குமார் மீது குற்றம் சாட்டிய அப்பெண்ணின் மீது புகார் அளித்தார்.

அதேபோல், வியாசர்பாடியைச் சேர்ந்த சூப் கடை நடத்தி வரும் சந்தோஷ் குமார் என்பவரும் அப்பெண் மீது புகார் அளித்தார். அவரது புகாரில், மண்ணடியில் நான் வைத்திருந்த சூப் கடைக்கு அப்பெண் வந்து போனதால் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. என்னைக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் சொன்னார். தனது தாயாருக்கு இதயப் பிரச்னை இருக்கிறது. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது என்றார். திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.3.50 லட்சத்தை  அவருக்கு அளித்தேன். பணத்தைக் கேட்டபோது, என் பாலியல் புகார் கொடுப்போம் என அப்பெண்ணும், அவரது தாயாரும் மிரட்டினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் கர்ப்பமாகியதில் குழந்தை பிறந்ததாக கூறப்படும் இளம்பெண் விகடன் இதழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், விளையாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆதாரங்களை வெளியிடுவேன் என எச்சரித்துள்ளார்.

பேட்டியில் அப்பெண் பேசிய விவரமாவது: ஜெயக்குமாருக்கு வேண்டப்பட்ட செந்தில்தான் சந்தோஷ்குமாரிடம் பேசியிருக்கிறார். அவருக்குப் பணத்தைக் கொடுத்து இப்படி அபாண்டமான புகாரை என் மீது சுமத்தியிருக்கிறார்கள். அப்படிப் பணத்தை வாங்கி ஏமாற்றும் அளவுக்கு வசதி இல்லாதவர்கள் அல்ல நாங்கள். எங்களுக்குச் சொந்தமான வீடு இருக்கு. பிசினஸ் செய்து வருகிறோம். சந்தோஷ்குமாரிடம் பணத்தை வாங்கும் அளவுக்கு எங்கள் நிலைமை இல்லை. அமைச்சர் தொடர்பான ஆதாரங்கள் நிறைய இருக்கு. அதுபோல ஆதாரம் இருந்தால் சந்தோஷ்குமாரை காட்டச் சொல்லுங்கள். அமைச்சரைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்து அவர் எங்களை அசிங்கப்படுத்த நினைக்கிறார். என் விவகாரத்தை திசைத் திருப்ப இப்படிப் பொய்யான புகார்களை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதோடு இந்த விளையாட்டை நிறுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.