விளம்பரங்களுக்கு ரூ.3044 கோடி செலவு செய்த பிரதமர் மோடி; மாயாவதி சாடல்!

 

விளம்பரங்களுக்கு ரூ.3044 கோடி செலவு செய்த பிரதமர் மோடி; மாயாவதி சாடல்!

விளம்பரங்களுக்காக பிரதமர் மோடி ரூ.3044 கோடி செலவு செய்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சாடியுள்ளார்

லக்னோ: விளம்பரங்களுக்காக பிரதமர் மோடி ரூ.3044 கோடி செலவு செய்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சாடியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் ஏப்ரல் 11, 18, 23,  மற்றும் மே மாதம் 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் எதிரிக் கட்சிகளாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் இந்த மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன. தொகுதி பங்கீடு பிரச்னை காரணமாக உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என இந்த இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. எனினும், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

அகிலேஷ் யாதவும், மாயாவதியும் அங்கு தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், அடிக்கல் நாட்டு விழாக்களில் பிஸியாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, விளம்பரங்களுக்காக ரூ.3044 கோடி செலவு செய்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சாடியுள்ளார்.

மக்களின் இந்த பணத்தை வைத்து, உத்தரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளை அளித்திருக்கலாம். ஆனால், பாஜக அரசுக்கு மக்கள் நலனை விட அவர்களது விளம்பரமே முக்கியம் எனவும் மாயாவதி விமர்சித்துள்ளார்.

தங்களது தோல்விகளை மறைத்து, வறுமை, வேலையின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சிகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ள மாயாவதி, மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.