விலை உயர்ந்தாலும் வாங்கி குவிக்கும் மக்கள்…….. ஒரே மாதத்தில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி……

 

விலை உயர்ந்தாலும் வாங்கி குவிக்கும் மக்கள்…….. ஒரே மாதத்தில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி……

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் நம் நாடு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.21 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்துள்ளது.

நம் நாட்டில் தங்கம் உற்பத்தி பெயரளவில்தான் நடைபெறுகிறது. இதனால் தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கம் இறக்குமதியில் சீனாவுக்கு அடுத்து நாம் இரண்டாவது இடத்தில் உள்ளோம். தங்கத்தை ஆபரணமாக மட்டும் பார்க்காமல் சிறந்த முதலீடாகவும் மக்கள் கருதுவதால்தான் இங்க தங்கம் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இதன் விளைவாக தங்கம் இறக்குமதி அதிகரிக்கிறது. தங்கம் இறக்குமதியால் மத்திய அரசுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை. இறக்குமதியால் அன்னிய செலாவணி கையிருப்புதான் காலியாகிறது. மேலும் மக்களும் தங்கத்தை வாங்கி பாதுகாப்பாக பெட்டிகளில்தான் பூட்டி வைக்கின்றனர்.

தங்க ஆபரணங்கள்
 தங்கம் இறக்குமதியை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தங்க டெபாசிட், தங்க பத்திரம் திட்டங்களை 2015 நவம்பரில் அறிமுகம் செய்தது. தங்க பத்திரம் திட்டம் என்பது தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதிலாக காகித வடிவில் பத்திரமாக வாங்கி கொள்ளலாம். ஒருவர் ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் அரை கிலோ அளவுக்கு தங்க பத்திரத்தை வாங்கி கொள்ளலாம். தங்க பத்திர வெளியீட்டுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

தங்க ஆபரணம்

இருப்பினும், மக்கள் தங்கத்தை உலோகமாக வாங்குவதையே விரும்புகின்றனர். கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை உச்சத்தில் உள்ளது. இருப்பினும் நம்மவர்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் மட்டும் இன்னும் போக மறுக்கிறது. 2019 நவம்பரில் மாதத்தில் இந்தியாவுக்குள் சுமார் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் இறக்குமதியாகியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 6.59 சதவீதம் அதிகமாகும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.