விற்பனை குறைந்து போச்சு! ஆனால் லாபம் மட்டும் ரூ.1,523 கோடியாம்! பட்டய கிளப்பும் பஜாஜ் ஆட்டோ

 

விற்பனை குறைந்து போச்சு! ஆனால் லாபம் மட்டும் ரூ.1,523 கோடியாம்! பட்டய கிளப்பும் பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,523 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி இரு சக்கர மற்றும் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு நிதிநிலை முடிவுகளை (ஜூலை-செப்டம்பர்) பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ளது. பஜாஜ் ஆட்டோவின் செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் எதிர்பார்ப்புகளை காட்டிலும் சிறப்பாக இருந்தது.

பஜாஜ்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,523 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 21 சதவீதத்துக்கும் அதிகமாகும். அந்த காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ.1,256 கோடி மட்டுமே சம்பாதித்து இருந்தது. 2019 செப்டம்பர் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் 4 சதவீதம் குறைந்து ரூ.7,707 கோடியாக சரிவடைந்துள்ளது.

பஜாஜ் இரு சக்கர வாகனங்கள்

கடந்த செப்டம்பர் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 11.73 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது 2018 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 12 சதவீதம் குறைவாகும். விற்பனை குறைந்ததால் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வருவாய் குறைந்துள்ளது. அதேசமயம் அந்நிறுவனத்தின் லாபம் மட்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.