விறுவிறுப்பாக இருந்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்தது!

 

விறுவிறுப்பாக இருந்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்தது!

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்தித்து பேசியது அந்நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. மேலும், சீனாவுடான வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என கடந்த சில தினங்களுக்கு டிரம்ப் அறிவித்தது சர்வதேச பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

பங்குச் சந்தை

மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளால் பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீட்டை அதிகரித்தனர். மேலும் உள்நாட்டு நிலவரங்களும் சாதகமாக இருந்ததால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் டாட்டா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, எச்.டி.எப்.சி. நிறுவனம், எச்.டி.எப்.சி. வங்கி, சன்பார்மா, ஹீரோமோட்டோகார்ப் உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம் ஓ.என்.ஜி.சி., எச்.சி.எல்.டெக், மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,268 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,307 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேசமயம், 169 நிறுவன பங்குகளின் விலை மாற்றம் இன்று முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த பங்குகளின் சந்தை  மதிப்பு ரூ.1,52,55,199.96 கோடியாக உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று நிறுவனங்களின் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1,51,94,621.68 கோடியாக இருந்தது.

வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 291.86 புள்ளிகள் உயர்ந்து 39,686.50 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 76.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,865.60 புள்ளிகளில் நிலை கொண்டது.