விருப்பப்பட்ட சேனல்களுக்கு மட்டுமே கட்டணம்: காலக்கெடு நீட்டிப்பு

 

விருப்பப்பட்ட சேனல்களுக்கு மட்டுமே கட்டணம்: காலக்கெடு நீட்டிப்பு

கேபிள் மூலம் தொலைக்காட்சியில் விருப்ப சேனல்களுக்கு மட்டும் கட்டணம் என்ற புதிய விதிமுறைக்கான காலக்கெடுவை டிராய் நீட்டித்துள்ளது

டெல்லி: கேபிள் மூலம் தொலைக்காட்சியில் விருப்ப சேனல்களுக்கு மட்டும் கட்டணம் என்ற புதிய விதிமுறைக்கான காலக்கெடுவை டிராய் நீட்டித்துள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் கேபிள் சேவைகளுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தேவையான சேனல்களுக்கு மட்டும் மாதாந்திர கட்டணம் செலுத்தினால் போதும். இந்த விதிமுறை வருகிற 29-ம் தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த புதிய விதிமுறைகளால் வாடிக்கையாளர்கள் தற்போது பார்த்து வரும் சேனல் சேவையில், எந்தவிதத்திலும் இடையூறுகளைச் சந்திக்கமாட்டார்கள். ஒளிபரப்பாளர்கள் ஒவ்வொரு சேனலின் தனிப்பட்ட மாதாந்திர வாடகை விவரத்தையும், ஒட்டுமொத்த மாதாந்திர விவரத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான சேனல்களைத் தேர்வு செய்து அதற்குரிய மாதாந்திர வாடகையை மட்டும் செலுத்தலாம். அல்லது சேவைதாரர்கள் வழங்கும் பேக்கேஜ் முறையையும் தேர்வு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

டிராய்யின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மெட்ரோ கேபிள் ஆபரேட்டர்கள் நல சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிராய் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கேபிள் மூலம் தொலைக்காட்சியில் விருப்ப சேனல்களுக்கு மட்டும் புதிய  கட்டணம் என்ற உத்தரவுக்கு மேலும் ஒரு மாதம் காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார். நாளை முதல் அமலுக்கு வரவிருந்த இந்த புதிய நடைமுறை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கு தொடர்பாக ஜனவரி 3-ம் தேதிக்குள் மத்திய அரசு, டிராய் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, அன்றைய தினதுக்கு வழக்கை ஒத்தி வைத்தது.