விராட் கோலி தலைமையில் பெறும் வெற்றிகளைப் போல் உள்ளது: இடைத்தேர்தல் குறித்து ப.சிதம்பரம் ட்வீட்

 

விராட் கோலி தலைமையில் பெறும் வெற்றிகளைப் போல் உள்ளது: இடைத்தேர்தல் குறித்து ப.சிதம்பரம் ட்வீட்

விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் வெற்றிகளைப் போல் உள்ளது என கர்நாடக இடைத்தேர்தல் வெற்றி குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்

டெல்லி: விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் வெற்றிகளைப் போல் உள்ளது என கர்நாடக இடைத்தேர்தல் வெற்றி குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா, பெல்லாரி, மாண்டியா மக்களவை தொகுதிகள் மற்றும் ராமநகரா, ஜமாகாந்தி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, ராமநகரா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியும், ஜமாகாந்தி சட்டப்பேரவை தொகுதியில் களம் கண்ட காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், அம்மாநில பாஜக தலைவருமான எடியூரப்பாவின் மகன் போட்டியிட்ட ஷிமோகா மக்களவை தொகுதியை தவிர பெல்லாரி, மாண்டியா ஆகிய மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி கூட்டணியே முன்னிலையில் உள்ளது. இக்கூட்டணியே இங்கு வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இடைத்தேர்தல் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக இடைத் தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது. இதில் கற்க வேண்டிய பாடம்: கூட்டணி பலன் தந்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.