விராட் கோலியின் சதம் வீண்; மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி

 

விராட் கோலியின் சதம் வீண்; மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது

புனே: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்து, இந்தியாவுக்கு 284 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக மேற்கிந்திய அணி வீரர் சாய் ஹொப் 113 பந்துகளில் 95 ரன்களும், அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 39 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து, 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 47.4 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம், 3-வது ஒருநாள் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதமடித்தார். அணியின் ஸ்கோர் 220 ரன்களாக இருந்த போது மார்லன் சாமுவேல்ஸ் பந்தில் 107 ரன்களில் கோலி அவுட்டானார். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 3 சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, கவுகாத்தியில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டம் சமனில் முடிந்தது. இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றுள்ளதால் 1-1 என தற்போது வரை ஒருநாள் போட்டி தொடர் சமனில் உள்ளது. இதனால், அடுத்த இரண்டு போட்டிகளும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.