விமானத்தில் வந்து ஏடிஎம்-ல் நூதன திருட்டு: கைது செய்யப்பட்ட கொள்ளையன் பகீர் வாக்குமூலம்

 

விமானத்தில் வந்து ஏடிஎம்-ல் நூதன திருட்டு: கைது செய்யப்பட்ட கொள்ளையன் பகீர் வாக்குமூலம்

சென்னை: விமானத்தில் வந்து சென்னையில் ஏடிஎம்-களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஏடிஎம்-களை உபயோகப்படுத்திய நபர்களின் பணம் தொடர்ந்து திருடு போனது குறித்து ரயில்வே போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமிராக்கள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், பணம் திருடு போன அனைத்து ஏடிஎம்-களிலும் ஒரே நபர் இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

தொடர்ந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், ஏடிஎம்-ல் மீண்டும் கொள்ளையடிக்க வந்த அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணா என்பதும், பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் அவர் ஈடுப்பட்டதும் தெரியவந்துள்ளது.

போலீசாரிடம் தான் கையாண்ட யுக்தியாக அவர் அளித்த வாக்குமூலத்தில் உள்ள தகவல்களின் படி, தெலங்கானாவில் இருந்து நேர்த்தியாக உடை அணிந்து கொண்டு விமானத்தில் சென்னைக்கு வரும் கோபி கிருஷ்ணா, இரண்டு ஏடிஎம்-கள் இருக்கும் மையத்தில் நின்று கொள்வாராம். பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர் ஒரு ஏடிஎம்-ல் தனது கார்டை நுழைத்ததும், அதில் பணம் இல்லை என அவரிடம் கூறும் கோபி கிருஷ்ணா, இதில் பணம் எடுத்துக் கொள்ளுங்கள் என தான் நின்று கொண்டிருக்கும் ஏடிஎம் இயந்திரத்தை வாடிக்கையாளருக்கு விட்டுக் கொடுப்பது போல் நடித்து, அவர் பணம் எடுக்கும் போது அவருக்கு பின்னால் நின்று கொண்டு ரகசிய எண்ணை தெரிந்து கொள்வாராம். அதன் பின், அந்த வாடிக்கையாளர் சென்றதும், அவர் முதலில் தனது ஏடிஎம் கார்டை நுழைத ஏடிஎம் இயந்திரத்துக்கு சென்று ரகசிய எண்ணை போட்டு பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து விரைந்து சென்று விடுவாராம்.