விமர்சனம்’மெஹந்தி சர்க்கஸ்’…அரைத்த மாவையே அரைப்பது,கண்ணை மூடிக்கொண்டு கத்தி வீசுவது போல!

 

விமர்சனம்’மெஹந்தி சர்க்கஸ்’…அரைத்த மாவையே அரைப்பது,கண்ணை மூடிக்கொண்டு கத்தி வீசுவது போல!

90 களுக்கு முன்பு இளையராஜா இசையமைத்த சாகாவரம்பெற்ற பாடல்கள் எல்லாம் இந்தக் காதல் கதையில் முக்கிய கதாபாத்திரங்கள்.

சினிமா எடுப்பதே சர்க்கஸ்தான்,அதுவும் காதல் கதை என்ற காலகாலமாக அரைத்தமாவை கையிலெடுப்பது ஒரு புதுமுக இயக்குநருக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு கத்திவீசுவது போல.ஆனால்,அறிமுகஇயக்குனர் சரவணன் ராஜேந்திரனுக்கு குறிதவறவில்லை.

மகாராஷ்ட்ராவிலிருந்து கொடைக்கானல் மலையின் மடியிலிருக்கும் பூம்பாறைக்கு வருகிறது மெஹந்தி சர்க்கஸ்.அங்கே இளையராஜாவின் இசை என்கிற பசையை கொண்டு காதலர்களை சேர்த்துவைப்பதையே முழு நேரத் தொழிலாக செய்துகொண்டு இருக்கிறான் ஜீவா.அவனை தன்முதல் பார்வையிலேயே வீழ்த்துகிறாள் மெஹந்தி.

மெகந்தி சர்க்கஸ்

சர்க்கஸ் முதலாளியின் பேத்தி.ஜாதி வெறியனான அப்பன்,கத்திவீசும் சாகசம்,காதலில் தோற்ற பாதிரி,ஹீரோவுக்காக அறை வாங்கும் நண்பன், பூம்பாறையின் பச்சை ரகசியங்கள், 90 களுக்கு முன்பு இளையராஜா இசையமைத்த சாகாவரம்பெற்ற பாடல்கள் எல்லாம் இந்தக் காதல் கதையில் முக்கிய கதாபாத்திரங்கள்.

இவற்றை கண்முன் நிறுத்தும் செல்வகுமாரின் கேமராவும் படத்தின் நம்பகத்தன்மையை கூட்டும் ராஜு முருகனின் வசனங்களும் அவரது அண்ணனான் சரவணன் ராஜேந்திரனுக்கு மிகப் பெரிய பலம்.1992-ல் துவங்கி 2010-ல் முடியும் படத்தின் காட்சிகளில் காலத்தை உறைய வைத்திருக்கிறார் கலை இயக்குநர் சதீஷ்குமார்.

ஸ்வேதா

படம் முழுக்க இளையராஜாவின் பாடல்கள் சாரல் மழைபோல பெய்து கொண்டே இருந்தாலும் பின்னணி இசையில் ஷான் ரோல்டன் கவர்கிறார். இத்தனை பேர் இருந்தும் ‘மனசில் இருக்கறவந்தான் புருஷன்’ என்று சொல்லும் பூஜாவும்,கத்திவீசும் அன்கூர் விகால் இருவரும் கடைசிநேர சிக்ஸர்களை பறக்கவிட்டு நம்மை அசத்துகிறார்கள்.

இந்தியாவில் சர்க்கஸ் என்றாலே மலையாளிகளும் மராட்டியர்களும்தான், இதை சரியாக புரிந்துகொண்டு அசல் வட இந்திய முகங்களை தேர்வு செய்தது,அவர்கள் பேசும் கொச்சை தமிழையே படத்தில் பயன்படுத்தி இருப்பது என்று பல சாகசங்களை செய்து கதாநாயன் மாதம்பட்டி ரங்கராஜுக்கு இணையாக குறிதவராமல் கத்திவீசி இருக்கும் இயக்குநர் கடைசி காட்சியில் எடுத்திருக்கும் துணிச்சலான முடிவு கச்சிதம்.