விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தை இயக்கியது இந்திய கேப்டன்

 

விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தை இயக்கியது இந்திய கேப்டன்

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கியது இந்தியாவை சேர்ந்த பைலட் பாவ்யே சுனேஜா என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி 610 என்ற போயிங் ரக விமானம் இன்று காலை புறப்பட்டது. விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 189 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. வானில் பறந்த 13 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த விமானம், ஜகார்த்தாவின் வடகடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், கடற்படையினர் அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஹெலிகாப்டர் மூலமும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம், விமானத்தில் பயணித்தவர்களில் யாரும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கியவர இந்தியாவை சேர்ந்த விமானி பாவ்யே சுனேஜா என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இதை விமானம் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த விமானி பாவ்யே சுனேஜா சுமார்  6 ஆயிரம் மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.