விடுதியில் மகள்; தனிமையில் தாய்! – உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில்

 

விடுதியில் மகள்; தனிமையில் தாய்! – உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில்

கேள்வி: நான் இல்லத்தரசி. என் கணவர் வேலைக்கு செல்பவர். என் மகளை இந்த வருடம் கல்லூரி படிப்பிற்காக விடுதியில் சேர்த்த பிறகு வீட்டிற்குள் இருக்கவே எனக்கு பிடிக்கவில்லை. எனக்கென்று யாருமே இல்லாதது போல உணர்கிறேன். இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க?

சென்னை: உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அனைவருக்கும் பெரிய தலைவலியாக இருக்கும் உளவியல் பிரச்னையை தீர்ப்பதற்காக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் ‘ஒரு தீர்வு சொல்லட்டா #Friends’ என்ற வாசகர்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் உளவியலாளர் குமரன் குமணன் வாரா வாரம் வாசகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

அந்த வகையில் இந்த வாரம் நேயர் ஒருவர் கேட்ட கேள்வியும், அதற்கு உளவியலாளர் குமரன் குமணன் அளித்த தெளிவான பதிலும் பின்வருமாறு:

கேள்வி: நான் இல்லத்தரசி. என் கணவர் வேலைக்கு செல்பவர். என் மகளை இந்த வருடம் கல்லூரி படிப்பிற்காக விடுதியில் சேர்த்த பிறகு வீட்டிற்குள் இருக்கவே எனக்கு பிடிக்கவில்லை. எனக்கென்று யாருமே இல்லாதது போல உணர்கிறேன். இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க?

பதில்: இது மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டு கையாளப்பட வேண்டிய ஒரு சூழல். அதிலும் ஆசிய கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் இந்த சூழல் பரவலாக உள்ளது. இதில் இந்தியா போன்ற ஒரு மாபெரும் தேசமும் விதிவிலக்கு அல்ல. தற்போதைய தலைமுறையை சேர்ந்த பல பெண்கள் இந்த சூழலே இல்லாமல் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தாலும், முந்தைய தலைமுறை பெண்களிடையே இந்த சிக்கல் காணப்படுவது நிதர்சனம்.

ஒரு தீர்வு சொல்லட்டா #Friends

அப்படி ஒரு நிலையில் இருப்பவர்களை வழி நடத்தி புதிய வாழ்க்கை முறைக்கு தயார்படுத்துவது ஒரு முக்கிய பணி என்று கருதுகிறேன். அந்த வகையில் தீர்வு சொல்லக்கூடிய என்னால் தீர்வு தேடி வந்த உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டால் மகிழ்வேன். நீங்கள் உணரும் தனிமைக்கு நேர் எதிர் சூழல் உலகில் உண்டு. நீங்கள் எந்த பின்னணியை சேர்ந்தவர் என்பதை தெளிவுபடுத்தவில்லை.

நீங்கள் நகர்ப்புற பின்னணியை சேர்ந்தவராக இருந்தால், புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் இருந்தால் மொழி கற்றலை முன்னெடுக்கலாம். இந்திய மொழிகள் உட்பட உலகின் முக்கிய மொழிகள் பலவற்றை கற்றுத் தரும் மையங்கள் உண்டு. ஏதேனும் ஒரு மொழியை கற்றுத் தரும் வகுப்பில் சேர்வதன் மூலம், அறிவுத் தேடலுக்கு உணவையும், தனிமை உணர்வுக்கு மருந்தையும் அடையலாம். பிற விஷயங்களையும் இந்த முறையில் கற்கலாம் என்றாலும், மொழி கற்றல் என்று வந்துவிட்டால் உரையாடல் என்னும் விஷயம் பாடம் தொடர்பாக நிகழ்ந்தே ஆக வேண்டும். 

அதன் மூலம் நட்புக்களும், ஆசிரியர் மாணவர் என்ற வகையில் ஏற்படும் பந்தமும், வாழ்க்கையை அதுவரை அணுகாத கோணத்தில் அணுக வைக்கும். ஒருவேளை கிராமப்புற பின்னணியில் இருப்பவர் என்றால் ஏதேனும் கைத்தொழில் கற்க முனையலாம். இதிலும் மேற்சொன்ன சூழல் பொருந்தும். இரண்டில் எந்த புகுதியை சேர்ந்தவர் எனினும் தயவு செய்து தொலைக்காட்சி மற்றும் இணைய பழக்கத்தை குறைக்கவும். முடிந்தால் மொத்தமாகவே தவிர்க்கவும். வாழ்த்துக்கள். வெல்வோம்!