விடுதலை பெறும் வரை பயணம் தொடரும்: அற்புதம்மாள்

 

விடுதலை பெறும் வரை பயணம் தொடரும்: அற்புதம்மாள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையாகும் வரை எனது பயணம் தொடரும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.

கோவை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையாகும் வரை எனது பயணம் தொடரும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார். இதனால் அவருக்கு எதிராக பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ‘மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு’ பயணத்தை கோவையில் நேற்று தொடங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 28 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளனின் விடுதலைக்காக போராடி வருகிறேன். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, தமிழக அரசு முறையாக அமைச்சரவையை கூட்டி, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளனர். இதில் கவர்னர் உடனடியாக கையெழுத்திடுவதே முறையாகும். கவர்னர் 4½ மாதங்களாக காலதாமதம் செய்து வருகிறார்.

எனவே மக்களிடம் எங்களது தரப்பு நியாயத்தை கொண்டு சேர்க்கும் வகையில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளேன். மக்களின் கருத்துகளை கேட்டு இறுதி போராட்டம் பற்றி முடி வெடுப்பேன். எனது இந்த பயணம் 7 பேர் விடுதலைக்கானது. அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்வரை எனது பயணம் தொடரும் என்றார்.