விஜய் மல்லையா உள்பட கடனை செலுத்த தவறிய 50 பேரின் ரூ.69 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி…. ராகுல் காந்தி குற்றச்சாட்டு…

 

விஜய் மல்லையா உள்பட கடனை செலுத்த தவறிய 50 பேரின் ரூ.69 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி…. ராகுல் காந்தி குற்றச்சாட்டு…

வங்கி மோசடியாளர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்பட வேண்டும் என்றே வங்கிகளுக்கு கடனை திருப்பி செலுத்தாத 50 பேரின் மொத்தம் ரூ.68,607 கோடி கடனை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைசட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய ரிசர்வ் வங்கி அளித்த பதிலை மேற்கோள்காட்டி, வங்கி மோசடியாளர்கள்  நீரவ் மோடி, மெகுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா உள்பட வேண்டும் என்றே கடனை திரும்பி செலுத்தாத டாப் 50 பேரின் மொத்தம் ரூ.68,607 கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது. மேலும் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 செப்டம்பர் வரை மொத்தம் ரூ.6.66 லட்சம் கோடி கடனை மோடி தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையா

இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், நாட்டில் வங்கிகளில் கடனை வாங்கி விட்டு வேண்டும் என்றே திரும்ப செலுத்த தவறிய முதல் 50 பேரின் பெயரை தெரிவிக்கும்படி நான் நாடாளுமன்றத்தில் நேரடியாக கேட்டேன். ஆனால் மத்திய நிதியமைச்சர் எனது கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். தற்போது நீரவ் மோடி, மெகுல் சோக்சி மற்றும் பா.ஜ.க.வின் நண்பர்கள் அடங்கிய வங்கி மோசடியாளர்கள் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. அதனால்தான் இந்த உண்மை நாடாளுமன்றத்தில் இருந்து தடுக்கப்பட்டது என மத்திய அரசை குற்றச்சாட்டி பதிவு செய்து இருந்தார்.

நீரவ் மோடி

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இது குறித்து கூறுகையில், நாடே கொரோனா வைரஸை எதிர்த்து போராடுகிறது. மாநிலங்களுக்கு அளிக்க மத்திய அரசிடம் பணம் இல்லை. ஆனால் வங்கி கடனை வேண்டும் என்றே திரும்ப செலுத்த தவறியவர்களின் ரூ68,307 கோடி கடனை தள்ளுபடி செய்யவும், மன்னிக்கவும் மத்திய அரசிடம் பணம் உள்ளது என தெரிவித்தார்.