விஜய் மல்லையாவுக்கு அடுத்த அடி! கடனை வசூலிக்க அசையும் சொத்துக்களை விற்க வங்கிகளுக்கு அனுமதி!

 

விஜய் மல்லையாவுக்கு அடுத்த அடி! கடனை வசூலிக்க அசையும் சொத்துக்களை விற்க வங்கிகளுக்கு அனுமதி!

விஜய் மல்லையாவின் அசையும் சொத்துக்களை விற்பனை செய்து அவரது கடனை வசூல் செய்து கொள்ள வங்கி கூட்டமைப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் மதுபான சக்கரவர்த்தியும், தற்போது முடங்கி கிடக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிபருமான விஜய் மல்லையா பல வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடனை வாங்கி விட்டு திரும்ப செலுத்தவில்லை. இதனையடுத்து வங்கிகள் கொடுத்த கடனை திரும்ப கேட்க தொடங்கின. ஆனால் மல்லையா அவற்றை கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் கடனை வசூலிக்க கடன் கொடுத்த வங்கிகள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கின.

வங்கிகள்

இதற்கு மேலும் இங்கு இருந்தால் நம்மை சிறையில் அடைத்து விடுவார்கள் என்பதை உணர்ந்த விஜய் மல்லையா யாருக்கும் தெரியாமல் இங்கிலாந்துக்கு தப்பியோடி விட்டார். லண்டனில் வசிக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே விஜய் மல்லையாவை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. இதனையடுத்து அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ்

முடக்கப்பட்ட மல்லையாவின் அசையும் சொத்துக்களை விடுவித்து, அவற்றை விற்பனை செய்து அவர் செலுத்த வேண்டிய கடனை திரும்ப பெற அனுமதி அளிக்கும்படி சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டேட் வங்கி தலைமையிலான 15 வங்கிகள் கொண்ட கூட்டமைப்பு மனு தாக்கல் செய்து இருந்தது. தற்போது மல்லையாவின் அசையும் சொத்துக்களை விற்பனை செய்து அவரது கடனை வசூல் செய்து கொள்ள சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் இம்மாதம் 18ம் தேதிக்குள் மல்லையா தரப்பு மும்பை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கி உள்ளது. மேலும் அதுவரை தனது உத்தரவை செயல்படுத்த தடை விதித்துள்ளது.