விஜய் சேதுபதியை ஃபாலோ செய்த கடத்தல் கும்பல்: சிறுவனை கடத்தி 50லட்சம் கேட்டு மிரட்டல்!

 

விஜய் சேதுபதியை ஃபாலோ செய்த கடத்தல் கும்பல்: சிறுவனை கடத்தி 50லட்சம் கேட்டு மிரட்டல்!

பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவனை  ஆட்டோவில் கடத்திச் சென்று ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி : நடிகர் விஜய்சேதுபதி நடித்த சூது கவ்வும் திரைப்படத்தில் வரும் கடத்தல் காட்சியைப் போல்  பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவனை ஆட்டோவில் கடத்திச் சென்று ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி காந்திநகரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் சேலம் மேச்சேரியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் செயல் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். ராஜாவின் மகன் பிரகதீஸ்வரன், தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவனை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.

கடத்திச் சென்ற அந்த நபர் ராஜாவிடம் சிறுவனை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும் ரூ.50 லட்சம் தந்தால் விட்டுவிடுவதாகவும் போலீசிடம் சென்றால் சிறுவனைக் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனிடையே  சிறுவன்  ஆட்டோவில் இருந்து குதித்து தப்பியோடி அங்கிருந்த வீட்டிற்குள் புகுந்து கொண்டார். போலீசார் சிறுவனைத் தேடத் தொடங்கிய நிலையில் சிறுவன் தஞ்சம் புகுந்த வீட்டைச் சேர்ந்த தேவராஜ் என்பவர், ராஜாவைத் தொடர்பு கொண்டு நடந்ததைத் தெரிவித்துள்ளார். அடுத்த 15 நிமிடங்களில் போலீசார் சிறுவனை மீட்டுள்ளனர்.

ராஜாவுக்கு வந்த செல்போன் அழைப்பின் அடிப்படையில் போலீசார் தீவிரமாகத் தேடியதில், சிறுவனைக் கடத்தியவர்  வெங்கடேசன் என்ற ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரியவந்தது. ராஜா வீடு கட்டியபோது மேஸ்திரியாக வேலை செய்தவர் வெங்கடேசன், பணத்திற்காக ஆசைப்பட்டு சிறுவனைக் கடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.