விஜய்யின் 26 ஆண்டு சினிமா பயணம்: தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்!

 

விஜய்யின் 26 ஆண்டு சினிமா பயணம்: தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 26 ஆண்டுகள் கடந்ததை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சென்னை: நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 26 ஆண்டுகள் கடந்ததை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான விஜய் ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 4 ஆண்டுகளில் அடுத்தடுத்து 7 படங்கள் நடித்தார் விஜய். அதில் 4 படங்கள் அவரது அப்பாவின் இயக்கத்தில் வெளியானது. நிறைய படங்களில் நடித்தாலும் பெரிதாக வரவேற்பை பெறாத விஜய்க்கு1996ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘பூவே உனக்காக’ திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது.

vijay

‘லவ் டூடே’, ‘ஒன்ஸ்மோர்’, ‘நேருக்கு நேர்’, ‘காதலுக்கு மரியாதை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற கலவையான ஜானரில் விஜய் நடித்த படங்கள் வரவேற்பை பெற தமிழ் மக்களின் மனதிலும் விஜய் இடம்பிடித்தார். இளைஞர்களை பெரிதும் கவர்ந்த விஜய் நடித்த 25வது திரைப்படம் ‘கண்ணுக்குள் நிலவு’. இது எதிர்ப்பார்த்த அளவு சரியாக போகவில்லை என்றாலும் அதே ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படம் மெகா ஹிட்டானது. இப்படம் விஜய்யின் திரை வாழ்வில் மற்றொரு திருப்புமுனை படமாக இருந்தது.

இப்படி காதல் படங்களில் நடித்து ரசிகர், ரசிகைகளை வசீகரம் செய்த விஜய், 2003ல் ‘திருமலை’, 2004ல் ‘கில்லி’ ஆகிய படங்கள் மூலம் தன்னை ஒரு ஆக்‌ஷன் நாயகனாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தினார். கில்லி படம் வசூல் ரீதியாக விஜய்க்கு வெற்றியை பெற்றுத்தந்து காதல் நாயகனாக, ஆக்‌ஷன் நாயகனாக வளர்ந்த விஜய்யை மாஸ் ஹீரோவாக மாற்றியது. அத்துடன் ‘இளைய தளபதி’ என்ற புனைப்பெயரும் அவரை தொற்றிக் கொண்டது.

vijay

பின்னர் வெளியான ‘சச்சின்’, ‘வசீகரா’, ‘மதுர’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ போன்ற திரைப்படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை. பின் 2007ம் ஆண்டு, இயக்குநர் அவதாரம் எடுத்த பிரபுதேவாவின் இயக்கத்தில் விஜய் நடித்த ‘போக்கி’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. விஜய்யின் ரொமான்ஸ், நடிப்பு, ஆக்‌ஷன் உள்ளிட்ட அம்சங்களை காட்டிலும் அவரது நடன அசைவுக்கு ரசிகர்கள் ஏராளம். நடனத்தில் தனக்கென ஒரு ஸ்டைலை பின்பற்றும் விஜய், பாடுவதிலும் வல்லவர். விஜய் பாடிய பெருமாபாலான பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களே.

தமிழ் சினிமாவில் வெற்றி தோல்வி என கலவையாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த விஜய்க்கு அவர் நடித்த 50வது படமான ‘சுறா’ படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து வெற்றிப்படத்துக்காக இடைவிடாது உழைத்த விஜய், அடுத்தக்கட்டத்தை எட்டினார். தமிழ் சினிமாவில் அசைக்க முடியாது மாஸ் ஹீரோவாக மாறிய விஜய் நடித்த, ‘தலைவா’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என அடுத்தடுத்த திரைப்படங்கள் அரசியல் ரீதியாக சர்ச்சைகளில் சிக்கின.

vijay

விஜய்யின் ‘துப்பாக்கி’ திரைப்படம் முதன்முறையாக அவரை ரூ.100 கோடி வசூல் நாயகனாக மாற்றியது. அதன் பின்னர் வெளியான திரைப்படங்கள் வசூலில் வாரிக்குவிக்க சமீபத்தில் வெளியான ‘சர்கார்’ திரைப்படம் தளபதி விஜய்யை பாக்ஸ் ஆபீஸ் கிங்காக மாற்றியது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தப்படியாக வசூல் மன்னன் பட்டத்தை விஜய் தன்வசப்படுத்தியுள்ளார்.

வெற்றி, தோல்வி, கிசுகிசு, சர்ச்சைகள் என தனது 26 ஆண்டுகால திரை பயணத்தில் ஏராளமான அனுபவங்களை பெற்ற விஜய், பொறுமையாக தனது அடுத்தக்கட்ட இலக்கை நோக்கி பயணித்து வருகிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. ஸ்போர்ட்ஸ்மேனாக விஜய் நடிக்கும் இப்படத்தில் அவரது கெட்டப்பை காண இப்போதே ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

vijay

விஜய்யின் 26 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் #26YrsOfThalapathyVIJAY #26YearsOfVijayism உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ், புகைப்படங்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.