விஜயகாந்த் உடல்நிலை : சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை காரணமா? பின்னணி என்ன?

 

விஜயகாந்த் உடல்நிலை : சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை காரணமா? பின்னணி என்ன?

சென்னை: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்காததே விஜயகாந்த்  உடல்நிலை குறைவுக்கு காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கடந்த ஆண்டு சென்னை மணப்பாக்கத்தில்உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்குச் சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில்  தற்காலிகமாக டயாலிசிஸ் சிகிச்சையை மருத்துவர்கள் அவருக்குப் பரிந்துரைத்தனர்.

இந்நிலையில், தொடர் சிகிச்சைக்காக விஜயகாந்த் கடந்த ஜூலை 7-ம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு முதல்கட்ட சிகிச்சை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி சென்னை திரும்பினார். இதனால் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவருக்குக் கடந்த 31-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால் அதனை அவரது மகன் விஜய பிரபாகரன் மறுத்து வீடியோ வெளியிட்டார். 

vijayakanth health

 

தற்போது விஜயகாந்த்  உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து  வீடு திரும்பியுள்ளார். ஆனாலும் அவரின் உடல்நிலையில் பெரியளவு முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.  கடந்த டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் விஜயகாந்திற்கு   நடைபெற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தராததே உடல்நல குறைவுக்கு காரணம்  என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது. 

 

vijayakanth

ஆனால்  ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் சிங்கப்பூருக்கு  அழைத்துச் செல்லப்பட்டார், இது உண்மைக்குப் புறம்பான தகவல்  என்றும்  விஜயகாந்திற்கு அமெரிக்கா சென்று மீண்டும்  சிகிச்சை எடுக்க அவரது குடும்பத்தார் முடிவு செய்துள்ளதாகவும்  தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.  இதனால் அவர் விரைவில் பழைய நிலைக்கு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.