வாரா கடன் தள்ளுபடி கிடையாது: அருண் ஜெட்லி விளக்கம்

 

வாரா கடன் தள்ளுபடி கிடையாது: அருண் ஜெட்லி விளக்கம்

வாரா கடன் தள்ளுபடி கிடையாது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கமளித்துள்ளார்

டெல்லி: வாரா கடன் தள்ளுபடி கிடையாது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கமளித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பொதுத் துறை வங்கிகள் அவற்றின் மொத்த கடனில் குறிப்பிட்ட சதவீதத்தை வாராக் கடன் பிரிவில் வைப்பது வழக்கமான நடைமுறை. இதற்கு கடன் தள்ளுபடி என்று அர்த்தம் கிடையாது. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி, வரி பயன் மற்றும் மூலதன மேம்பாட்டுக்காக வாராக்கடன்களை தங்களது வரவு-செலவு கணக்கு அறிக்கையில் இருந்து நீக்குவது பொதுத்துறை வங்கிகள் வழக்கமாக கடைபிடிக்கும் நடைமுறை தான். எனவே, கடன் பெற்றவர்கள் அதனை திருப்பி செலுத்தியே ஆக வேண்டும். கடன்களை வசூலிப்பதில் வங்கிகள் தீவிர  நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்று கூறியுள்ளார்.

பாஜக ஆட்சியின் போது நான்கு ஆண்டுகளில் நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் ரூ.3.16 லட்சம் கோடி கடன் கொடுத்துள்ளதாகவும், அதில், ரூ.44,900 கோடி வாராக்கடன் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.36,551 கோடி கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அருண் ஜெட்லி, 2018-19 நிதியாண்டில் ரூ.74,562 கோடி கடன் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும், 2018-19 நிதியாண்டில் ரூ.1,81,034 கோடி கடன்களை வசூல் செய்ய பொதுத்துறை வங்கிகள் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது விதிகளை மீறி அதிகளவு கடன் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அருண் ஜெட்லி, 2008-ஆம் ஆண்டில் ரூ.18 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன், 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.52 லட்சம் கோடியாக அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.