வாராக்கடன் விவகாரம்: 6,000-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை-அருண் ஜெட்லி

 

வாராக்கடன் விவகாரம்: 6,000-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை-அருண் ஜெட்லி

வாராக்கடன் விவகாரத்தில் சுமார் 6,000-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்

டெல்லி: வாராக்கடன் விவகாரத்தில் சுமார் 6,000-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் வாராக்கடன் விவகாராம் பூதாகரமாகியுள்ளது. தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட பல்வேறு நபர்கள் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு நாட்டை விட்டு தப்பியோடியது பெரும் அதிர்வலைகளை எற்படுத்தியது. வங்கிகளில் வாராக்கடன் அதிகரிக்க வங்கி அதிகாஅரிகளின் தவறான முடிவுகளும், திருப்பி செலுத்தும் திறன் இல்லாதவர்களுக்கு வங்கி அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் ஆதாயம் பெற்று கடன்களை அளித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த கடன் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எழுத்து பூர்வமாக நேற்று பதிலளித்தார்.

அதில், வாராக்கடன் பிரச்னையில் வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவு, தவறான முடிவுகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வாராக்கடன், கடன் மோசடி தொகைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. கடந்த 2017-18-ம் நிதியாண்டில் மட்டும் மொத்தம் 6,049 அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணி நீக்கம், கட்டாய ஓய்வு, பதவியிறக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். வாராக்கடன் தொகை அதிக அளவில் இருக்கும் நிலையில் அந்த அதிகாரிகள் மீது போலீஸ் மற்றும் சிபிஐயில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.