வாராக்கடன் சுமையில் பொதுத்துறை வங்கிகள்! லாப மழையில் தனியார் வங்கிகள்!

 

வாராக்கடன் சுமையில் பொதுத்துறை வங்கிகள்! லாப மழையில் தனியார் வங்கிகள்!

பொதுத்துறை வங்கிகள் வாராக் கடனால் சிக்கி தவிக்கும் அதேநேரத்தில், கர்நாடகாக வங்கி, இண்டஸ்இந்த் வங்கி போன்ற தனியார் வங்கிகள் நல்ல லாபத்தில் திளைத்து வருகின்றன.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், தனியார் வங்கிகளான கர்நாடகா வங்கி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி ஆகியவை தங்களது கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. 

கர்நாடகா வங்கி

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) கர்நாடகா வங்கி நிகர லாபமாக ரூ.175.42 கோடி ஈட்டியுள்ளது. அந்த காலாண்டில் அந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.494.59 கோடியாகவும், இதர வருவாய் ரூ.244.79 கோடியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாத இறுதி நிலவரப்படி கர்நாடகாக வங்கியின் மொத்த வாராக் கடன் 4.55 சதவீதமாக குறைந்தது.

இண்டஸ்இந்த் வங்கி

மற்றொரு தனியார் வங்கியான இண்டஸ்இந்த் வங்கி கடந்த ஜூன் காலாண்டில் ரூ.1,432.50 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.2,844 கோடியாக உயர்ந்துள்ளது. வட்டி இல்லாத வருவாயும் ரூ.1,663 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம், கடந்த ஜூன் மாத இறுதிநிலவரப்படி, இண்டஸ்இந்த் வங்கியின் நிகர மொத்த வாராக் கடன் ரூ.2,380.51 கோடியாக அதிகரித்துள்ளது. 

தனியார் வங்கிகள் பெரும்பாலும் லாபத்தில் இயங்கும் அதேவேளை பொதுத்துறை வங்கிகள் வாராக் கடன் சுமையால் அல்லாடுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நிர்வாக சீா்திருத்தங்களை மேற்கொண்டால் தனியார் வங்கிகளை போன்று பொதுத்துறை வங்கிகளும் லாபத்தில் இயங்கும் என நிபுணர்கள்  கூறுகின்றனர்.