வாரத்தின் கடைசி வர்த்தக தினத்தில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 167 புள்ளிகள் குறைந்தது

 

வாரத்தின் கடைசி வர்த்தக தினத்தில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 167 புள்ளிகள் குறைந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மந்தகதியில் இருந்தது. சென்செக்ஸ் 167 புள்ளிகள் சரிந்தது.

சர்வதேச பொருளாதார வளர்ச்சி மேலும் வீழ்ச்சி கண்டால், 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான உலக கச்சா எண்ணெய் தேவை குறித்த தனது மதிப்பீடு குறைக்கப்படும் என உலக எரிசக்தி முகமை தெரிவித்தது. இதனால் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுமாராக இருந்தால் அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

சென்செக்ஸ் சரிவு

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களில் பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், ஐ.டி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடக்மகிந்திரா வங்கி மற்றும் என்.டி.பி.சி. உள்பட 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. இருப்பினும் வேதாந்தா, யெஸ் பேங்க், டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி., மாருதி, டெக்மகிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 20 நிறுவன பங்குகளின் விலை சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 973 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,549 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேவேளையில், 154 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் மொத்த சந்தை  மதிப்பு ரூ.147.66 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.148.46 லட்சம் கோடியாக இருந்தது.

மும்பை பங்குச் சந்தை
இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 167.17 புள்ளிகள் சரிந்து 38,822.57 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 58.80 புள்ளிகள் குறைந்து 11,512.40 புள்ளிகளில் நிலை கொண்டது.