வாட்ஸ் ஆப்பில் பரவிய செய்தியின் எதிரொலி: சாய்ந்த மரங்களை நடுவதில் விவசாயிகள் ஆர்வம் !

 

வாட்ஸ் ஆப்பில் பரவிய செய்தியின் எதிரொலி: சாய்ந்த மரங்களை நடுவதில் விவசாயிகள் ஆர்வம் !

கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை: கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கஜா புயலின் தாக்கத்தால்  புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமே சுமார் 10 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்தன. இதேபோன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்தன. முறிந்த மரங்களை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்து விலையில்லாமல் தென்னை மரங்களைச் சிலர் தங்களது தேவைக்கு ஏற்ப வெட்டிச் செல்கின்றனர்.

இந்நிலையில், வேரோடு சாய்ந்த மரங்களை மீண்டும் நடவு செய்தால் காய்க்கும் எனச் சமூக வலைதளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் சாய்ந்த மரங்களை நடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து செரியலூரில் வேரோடு சாய்ந்த மரங்களை அதே தோட்டத்தில் மீண்டும் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், ‘வேரோடு சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தாமல் மீண்டும் நடவு செய்தால் மீண்டும் காய்க்கும் என வாட்ஸ்அப் மூலம் தகவல் வந்தது. இதை நம்பி மரங்களை நடவு செய்து வருகிறோம். இதற்காக சுமார் 15 ஆண்டுகளுக்குள்ளான, வேரோடு சாய்ந்த மரங்களின் மட்டைகளை நீக்கிவிட்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 10 அடி குழி தோண்டி அதில், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து, இடுபொருட்கள் இட்டு மரத்தை நடுகிறோம். நாளொன்றுக்கு அதிகபட்சமாக 20 மரங்கள் நடப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளனர்.