வாட்ஸப் ஆப்பில் வருவதெல்லாம் ஆதரமா? ஜெயக்குமாரை வறுத்தெடுத்த திமுக அன்பழகன்!

 

வாட்ஸப் ஆப்பில் வருவதெல்லாம் ஆதரமா? ஜெயக்குமாரை வறுத்தெடுத்த திமுக அன்பழகன்!

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மின்சாரம் திருடியதாக குற்றம் சுமத்தியிருந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மின்சாரம் திருடியதாக குற்றம் சுமத்தியிருந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பதிலடி கொடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காகப் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

kalaingar

இந்த விழாவிற்காக வைக்கப்பட்ட கட் அவுட்களுக்கு மாநகராட்சி மின் கம்பங்களில் இருந்து திமுகவினர் மின்சாரம் திருடியதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருந்தார். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கு திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன், காட்டமாக பதிலளித்துள்ளார்.

kalaignar statue

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை அண்ணா அறிவாலயம் மற்றும் ஒய்.எம்.சி.ஏ மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி , சோனியா காந்தி மற்றும் மூன்று மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தியது. கூட்டம் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்துக்கான மின்சாரம் முழுவதும் ஜெனரேட்டர் மூலம் பெறப்பட்டது. இது அனைவருக்கும் தெரியும். 

சிலை திறப்பு விழா மாபெரும் வெற்றி பெற்றதால் பொதுமக்களின் ஆதரவு தி.மு.கவுக்கு பல மடங்காக அதிகரித்து வருகிறது.  இதை பொறுத்துக்கொள்ள முடியாத மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விழாவுக்குக் களங்கம் ஏற்படுத்த பத்திரிகையாளர்களிடம் மின் திருட்டு என வாட்ஸ்அப்பில் வந்த செய்தியை காண்பித்துக் குற்றம் சுமத்துகிறார். வாட்ஸ்அப்பில் வந்ததையெல்லாம் ஆதாரமாக எடுத்துப் பேசினால் அமைச்சர் மீது எவ்வளவோ பேசலாம். ஆனால் தி.மு.க-வினர் என்றைக்கும் தரம் தாழ்ந்து ஈடுபடமாட்டார்கள். அமைச்சரின் பேச்சிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியால் ஆளும் கட்சி ஆட்டம் கண்டு அஞ்சி நடுங்கிப்போய் இருப்பது நன்றாகத் தெரிகிறது” என காட்டமாக தெரிவித்துள்ளார்.