வாடகை கேட்டு துன்புறுத்திய வீட்டு உரிமையாளர் கைது!

 

வாடகை கேட்டு துன்புறுத்திய வீட்டு உரிமையாளர் கைது!

கேரளாவில் வாடகை கேட்டு கூலித்தொழிலியை துன்புறுத்திய வீட்டு உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்களுக்கும் தினக்கூலிகளும் கையில் பணம் இல்லாமல் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் வாடகை கேட்டு கூலித்தொழிலியை துன்புறுத்திய வீட்டு உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  

இடுக்கியில் உள்ள முட்தலைக்கோட்டா பகுதியைச் சேர்ந்த மாத்யூ, தாமஸ் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு சொந்தமான இடத்தில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வாடகை கொடுத்து வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் மேத்யூக்கு வேலையின்றி, வாடகை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வாடகை கொடுக்க வற்புறுத்திய வீட்டு உரிமையாளர் தாமஸ், வீட்டின் மின் இணைப்பையும், குடிநீர் இணைப்பையும் துண்டித்துள்ளார்.

arrest

மேலும், வழித்தடத்தையும் அடைத்துவிட்டு வீட்டை காலி செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வீட்டு உரிமையாளர் தாமஸை கைது செய்தனர். மேலும், மேத்யூ தங்கியிருந்த வீட்டிற்கான மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த கேரளா எம்.எல்.ஏ, பி.ஜே.ஜோசப், மேத்யூ குடும்பத்திற்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினர். இதனிடையே கைது செய்யப்பட்ட உரிமையாளர் தாமஸ் பிணையில் அனுப்பப்பட்டார்.