வாங்க நாம சேர்ந்து பணியாற்றலாம்ன்னு மோடி சொன்னாரு… நான்தான் மாட்டேன்னு சொல்லிட்டேன்…..உண்மையை போட்டு உடைத்த சரத் பவார்

 

வாங்க நாம சேர்ந்து பணியாற்றலாம்ன்னு மோடி சொன்னாரு… நான்தான் மாட்டேன்னு சொல்லிட்டேன்…..உண்மையை போட்டு உடைத்த சரத் பவார்

பிரதமர் மோடி நாம் சேர்ந்து பணியாற்றலாம்ன்னு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நான்தான் அதனை மறுத்து விட்டேன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தற்போது தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக அதிக இடங்களை வென்ற பா.ஜ.க. தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததாகவும், பிரதமர் மோடி இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து சரத் பவார் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

பிரதமர் மோடி

இந்த சூழ்நிலையில், சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சரத் பவார் பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து வெளிப்படையாக தெரிவித்தார். சரத் பவார் பேட்டியின் போது கூறியதாவது: நாம் சேர்ந்து பணியாற்றலாம் என பிரதமர் மோடி என்னிடம் முன்மொழிந்தார். ஆனால் நான் அவரிடம் நம்முடைய தனிப்பட்ட உறவுகள் நன்றாக உள்ளது மற்றும் அவை அப்படியே இருக்கும்.

சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே

ஆனால் என்னை பொறுத்தவரை உங்களுடன் சேர்ந்து பணியாற்ற முடியாது என அவரிடம் தெரிவித்தேன். என்னை குடியரசு தலைவராக ஆக்குவதாக மோடி அரசு எனக்கு வாக்குறுதி அளிக்கவில்லை. ஆனால் சுப்ரியாவை (சரத் பவார் மகள்) பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மந்திரியாக ஆக்குவதாக கூறினார்கள். இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் மோடி தேசியவாத காங்கிரஸ்  தலைவர் சரத் பவாரை பெரும்பாலும் விமர்சனம் செய்தது இல்லை. பாராட்டியே பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவையின் 250வது கூட்டத்தொடர் விழாவில் மோடி பேசுகையில்,  நாடாளுமன்ற விதிமுறைகளை எப்படி கடைப்பிடிப்பது என்பதை பா.ஜ.க. உள்பட அனைத்து கட்சிகளும் என்.சி.பி.யிடம் (தேசியவாத காங்கிரஸ்) இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.