வாங்கிய கடனை ஒரு பைசா பாக்கி இல்லாமல் திருப்பி தாரேன்… வழக்கை க்ளோஸ் பண்ணுங்க…. மீண்டும் கெஞ்சும் விஜய் மல்லையா…

 

வாங்கிய கடனை ஒரு பைசா பாக்கி இல்லாமல் திருப்பி தாரேன்… வழக்கை க்ளோஸ் பண்ணுங்க…. மீண்டும் கெஞ்சும் விஜய் மல்லையா…

இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் வங்கிகளில் வாங்கிய கடனை 100 சதவீதம் திருப்ப தர தயாராக இருப்பதாக மீண்டும் மல்லையா தெரிவித்துள்ளார்.

மதுபான வர்த்தக சக்கரவர்த்தியும், தற்போது முடங்கி கிடக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புரோமோட்டருமான விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் வாங்கிய சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடனை வேண்டும் என்றே திரும்ப செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்த வங்கிகள் சட்டப்பூர்வமான நடவடிக்கையில் இறங்கின. இதனையடுத்து இதற்கு மேலும் இங்கு இருந்தால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த விஜய் மல்லையா யாருக்கும் தெரியாமல் இங்கிலாந்துக்கு தப்பியோடி விட்டார்.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ்

இதனையடுத்து இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்த விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு அந்நாட்டு அரசிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. மேலும் இது தொடர்பாக லண்டனில் உள்ள நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. ஆனால் அதனை எதிர்த்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் லண்டன் உயர் நீதிமன்றம் மல்லையாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து லண்டன் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி விஜய்மல்லையா மனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால் நேற்று அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

லண்டன் நீதிமன்றம்

இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் விரைவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுமதி மறுக்கப்படுவதற்கு முன்னதாக நேற்று காலையில் விஜய் மல்லையா தனது கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்த தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக மல்லையா டிவிட்டரில், கோவிட்-19 நிவாரண தொகுப்புக்காக மத்திய அரசுக்கு எனது வாழ்த்துக்கள். அவர்களுக்கு வேண்டிய அளவுக்கு நாணயத்தை அவர்களால் அச்சடிக்க முடியும். ஆனால் அரசுக்கு சொந்தமான வங்கிகளில் வாங்கிய கடனை 100 சதவீதம் திரும்ப செலுத்த தயாராக இருக்கும் என்னை போன்ற சிறிய பங்களிப்பாரை தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? தயவு செய்து எனது பணத்தை நிபந்தனையின்றி எடுத்து கொள்ளுங்கள் மற்றும் வழக்கை மூடுங்க என பதிவு செய்து இருந்தார்.