வாகன விற்பனை, ஜி.டி.பி. உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும்- நிபுணர்கள் முன்னறிவிப்பு….

 

வாகன விற்பனை, ஜி.டி.பி. உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும்- நிபுணர்கள் முன்னறிவிப்பு….

வாகன விற்பனை, பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரம் போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும். கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த பிறகு கடந்த ஜூன் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டது. அந்த காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதம் மட்டுமே வளாச்சி கண்டு இருந்தது. இது பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். 

பங்குச் சந்தை

கடந்த ஆகஸ்ட் மாத வாகனங்கள் விற்பனை நிலவரமும் இந்த பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய காரணியாக இருக்கும். கடந்த ஜூலை மாத முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி உள்பட சில முக்கிய புள்ளிவிவரங்கள் நாளை வெளிவர உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் இரண்டு நாள் (செப்.4,5) பயணமாக ரஷ்யா செல்கிறார். இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தை

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர், அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு மற்றும் உள்நாட்டு அரசியல் நிலவரங்கள் போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை நிர்ணயம் செய்யும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.