வாகன தயாரிப்பு நிறுவனங்களை வழிக்கு கொண்டு வர மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

 

வாகன தயாரிப்பு நிறுவனங்களை வழிக்கு கொண்டு வர மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

2025க்குள் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என்பதற்கு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவர்களை வழிக்கு கொண்டு பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

காற்று மாசுவால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது உயிரை துறக்கின்றனர். இந்த காற்று மாசுவுக்கு முக்கிய காரணம் தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, வாகனங்கள் வெளியிடும் புகை போன்றவைதான் முக்கிய காரணம். இதனால் சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் வாகனங்கள் தயாரிப்பு இருக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

மின்சார வாகனம்

குறிப்பாக மின்சாரத்தில் இயங்கும் வகையில் வாகனங்கள் தயாரித்தால் நன்றாக இருக்கும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது நடைமுறையில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் அது மிகவும் சொற்பமான அளவில்தான் உள்ளது. இதனையடுத்து மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதன் பிறகும் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் வேகம் எடுக்கவில்லை.

இந்த நிலையில், அண்மையில் முன்னணி 2,3 வீலர் வாகன தயாரிப்பு நிறுவனங்களை கூப்பிட்டு நிதி ஆயோக் ஒரு கூட்டத்தை போட்டது. அந்த கூட்டத்தில் 2025க்குள் 150 சி.சி. திறனுக்கும் குறைவான அனைத்து இரு மற்றும் 3 சக்கர வாகன தயாரிப்புகளையும் மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும்.இல்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என நிறுவனங்களை நிதி ஆயோக் எச்சரிக்கை செய்தது.

மின்சார வாகனம்

ஆனாலும், நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்புக்கு எதிர்ப்பு காட்டுவதாக தெரிகிறது. இதனை பார்த்த மத்திய அரசு, உள் எரிப்பு எந்திரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் தயாரிப்பு மற்றும் வாங்குவதையை குறைக்கும் வகையில் புகை உமிழ்வு விதிமுறைகளை கடுமையாக்குவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. மத்திய அரசு அப்படி நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் நிறுவனங்கள் தானாகவே மின்சார வாகன தயாரிப்புக்கு மாறி விடும்.