வாகன உதிரிபாகங்கள் துறையில் 10 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

 

வாகன உதிரிபாகங்கள் துறையில் 10 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

வாகன விற்பனையில் தொடர் சரிவு தொடர்ந்தால் வாகன உதிரிபாகங்கள் துறையில் 10 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இத்துறையை சேர்ந்த அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வாகனங்கள் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. குறிப்பாக கடந்த 10 மாதங்களாக வாகனங்கள் விற்பனை தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது. இதனால் வாகன தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். கையிருப்பு அதிகமாக உள்ளதால் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்து விட்டன. 

கார்கள்

வாகன விற்பனை படுத்து விட்டதால் முதலில் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது வாகன உதிரிபாகங்கள் துறைதான். வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு துறையில் சுமார் 50 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். வாகன விற்பனை மந்த நிலையால் ஏற்பட்டுள்ள அபாயங்கள் குறித்து  இந்திய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்புகள் சங்கத்தின் தலைவர் ராம் வெங்கடரமணி கூறியதாவது: கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை மந்தமாக உள்ளதால் அதன் தாக்கம் வாகன உதிரிபாகங்கள் துறையில் வெளிப்படுகிறது. 

வாகன துறையின் வளர்ச்சியை சார்ந்துதான் வாகன உதிரிபாகங்கள் துறை வளர்ச்சி உள்ளது. தற்போது 15 முதல் 20 சதவீதம் வரை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பை நிறுத்தி விட்டன. தொடர்ந்து வாகன துறையில் மந்தநிலை நீடித்தால் வாகன உதிரிபாகங்கள் துறையில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

வாகன உதிரிபாகங்கள்

எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும். தேவையை அதிகரிக்கும் வகையில், வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரியாக 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க வேண்டும். 70 சதவீத வாகன உதிரிபாகங்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் வந்து விட்டது. எஞ்சிய 30 சதவீத வாகன உதிரிபாகங்களுக்கும்  18 சதவீதம் வரி பிரிவுக்குள் கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.