வாகனங்கள் விற்பனை சரிவால் கவலையில்லை- கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்….

 

வாகனங்கள் விற்பனை சரிவால் கவலையில்லை- கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்….

வாகனங்கள் விற்பனை சரிவால் கவலையில்லை. அந்த துறை பொருளாதாரத்தின் ஒரு பகுதிதான். அதேசமயம் ஒட்டுமொத்த உற்பத்தி துறை சிறப்பாக செயல்படுகிறது என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

கடந்த 4ம் தேதி நாடாளுமன்றத்தில் 2018-19ம் நிதியாண்டின் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி தயார் செய்து இருந்தார். அதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பொருளாதார ஆய்வறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார பலம் 5 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் என கூறப்பட்டு இருந்தது.

கார்கள்

5 லட்சம் கோடி டாலர் பொருளாதார பலத்தை எட்ட வேண்டும் என்றால் ஆண்டுக்கு 8 சதவீதம் பொருளாதாரத்தில் வளர்ச்சி காண வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதியாண்டிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

ஆண்டுக்கு 8 சதவீதம் வளர்ச்சி தேவை என்ற நிலையில், இந்த நிதியாண்டில் 7 சதவீதம்தான் பொருளாதாரத்தில் வளர்ச்சி காண முடியும் என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என ஒரு சாரர் நினைக்கின்றனர்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

இந்நிலையில், வாகனங்கள் விற்பனை சரிவு, இந்தியாவின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார கனவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்று செய்தியாளர்கள் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனிடம் கேட்டனர். அதற்கு அவர், வாகனங்கள் விற்பனை சரிவால் கவலையில்லை. பொருளாதாரத்தில் ஒரு பகுதிதான் வாகன துறை. அதேசமயம் ஒட்டு மொத்த அளவில் உற்பத்தி துறை நன்றாக செயல்படுகிறது. எனவே 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் நிறைவேறக் கூடியதுதான் என்று பதில் அளித்தார்.