வழக்கத்தை விட உயர்ந்த மது விற்பனை… மக்கள் மீது அக்கறை இருந்தால் டாஸ்மாக் கடையை மூடுங்கள்! – கே.எஸ்.அழகிரி காட்டம்

 

வழக்கத்தை விட உயர்ந்த மது விற்பனை… மக்கள் மீது அக்கறை இருந்தால் டாஸ்மாக் கடையை மூடுங்கள்! – கே.எஸ்.அழகிரி காட்டம்

உலகத்தையே அச்சுறுத்தி, பீதியில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருவதை தடுக்க மத்திய – மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நேற்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிற்கு நாட்டு மக்கள் ஒட்டுமொத்த ஆதரவையும் வழங்கியிருக்கிறார்கள். கண்ணுக்கு தெரியாத உயிர்க்கொல்லி நோயான கொரோனாவை எதிர்த்து தமிழக அரசு மருத்துவர்கள் துணிவுமிக்க பணியை செய்து வருகிறார்கள்.

மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் மதுக்கடைகளை மூடி கொரோனா பரவாமல் தடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“உலகத்தையே அச்சுறுத்தி, பீதியில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருவதை தடுக்க மத்திய – மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நேற்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிற்கு நாட்டு மக்கள் ஒட்டுமொத்த ஆதரவையும் வழங்கியிருக்கிறார்கள். கண்ணுக்கு தெரியாத உயிர்க்கொல்லி நோயான கொரோனாவை எதிர்த்து தமிழக அரசு மருத்துவர்கள் துணிவுமிக்க பணியை செய்து வருகிறார்கள். காற்றுபுகாத கவசஉடை மற்றும் முக கவசம் அணிந்து தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலையில் நோயாளிகளை கவனிக்கும் தமிழக அரசு மருத்துவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அரசு மருத்துவர்களுக்கு துணைபுரிந்த செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றுவதில் அரசு மருத்துவமனைகளில் காட்டுகிற முனைப்பு, தீவிரம், தனியார் மருத்துவமனைகளில் காட்டப்படவில்லை என்கிற வருத்தத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. மேலும் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், உள்ளாட்சித்துறையினர், வருவாய் துறையினர், செய்திகளை நாட்டு மக்களுக்கு வழங்குகிற ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளுக்கு உரியவர்கள் ஆவார்கள்.

sweepers

பொதுவாக, கொரோனா நோய் 60 வயதிற்கு மேற்பட்டவர்களைத் தான் தாக்கும், இளைஞர்களிடம் நெருங்காது என்ற ஒரு தவறான புரிதல் இருந்து வருகிறது. இதை தெளிவுபடுத்தும் வகையில் உலக சுகாதார நிறுவனம், இளையவர்கள், முதியவர்கள், நோயாளிகள், ஆரோக்கியமானவர்கள், ஆண்கள், பெண்கள் என்ற எந்த பேதமுமின்றி அனைவரையும் இந்நோய் பாதிக்கும் என்று அறிவித்திருக்கிறது. இது எல்லோரையும் தாக்கும் வல்லமை படைத்தது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும். வள்ளலார் கூற்றின்படி ‘தனித்திரு, விழித்திரு” என்ற வாசகங்களை மனதில் நிறுத்தி, மக்கள் நோயில்லா வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

corona-patient

கொரோனா நோய் பாதிக்காமல் இருக்க பல்வேறு முனைகளில் போராடிக் கொண்டிருக்கிற அதேவேளையில், மிகுந்த வருத்தமான செய்தி என்பது டாஸ்மாக் கடை விற்பனையில் கடந்த 21ம் தேதி சனிக்கிழமை அன்று மது விற்பனை ஒரே நாளில் ரூபாய் 220.49 கோடி என்று செய்தி வெளியாகி இருக்கிறது. சாதாரண நாளில் ரூபாய் 70 முதல் 100 கோடியும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ரூபாய் 120 முதல் 135 கோடி வரை விற்றுக் கொண்டிருந்து மது விற்பனை, மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமைக்கு முதல்நாளான சனிக்கிழமை அன்று மது பிரியர்கள் முன்கூட்டியே வாங்கி குவித்துக் கொண்டிருப்பதை விட ஒரு கொடுமையான நிகழ்வு வேறு எதுவும் இருக்க முடியாது. இத்தகைய செய்தியை தமிழக அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் சகித்துக் கொண்டு, மவுனம் காப்பதை எவராலும் சகித்துக் கொள்ள முடியாது.
ஒருபக்கம் கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை போராடிக் கொண்டிருக்கிறது. அதற்காக அவர்களை பாராட்டுகிறோம். மறுபக்கம் கொரோனா உற்பத்தி செய்கிற கூடமாக டாஸ்மாக் கடைகள் விளங்கி வருவதை தமிழக ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் ? ஒரே நாளில் மது விற்பனை உச்சத்தை அடைந்தது குறித்து கவலைப்படாத அரசை மக்கள் விரோத அரசு என்று கூறாமல் மக்கள் நலன் சார்ந்த அரசு என்று யாராவது கூற முடியுமா ?

tn-wine-shop

கொரோனா நோய் தடுப்பிலும், பெரும்பாலான மக்களில் மது அருந்துபவர்கள் அதிகமான எண்ணிக்கை இருக்கிற காரணத்தினாலே அதை தடுப்பதில் உண்மையிலேயே தமிழக அரசுக்கு அக்கறை இருக்குமேயானால் உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இதை செய்யத் தவறுவாரேயானால் மிகக் கடும் விளைவுகளை நமது மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபகாலமாக சமூகப் பிரச்சினைகளில் அதிக கவனத்தை பெண்கள் காட்டி வருகிறார்கள். இதற்காக குரல் கொடுக்கிறார்கள், போராடுகிறார்கள். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளினால் பெண்கள் சமுதாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சமூக கொடுமைகளை எதிர்த்து காந்தியடிகள் காட்டிய வழியில் போராட வேண்டிய அவசியம் குறித்து, பெண்களின் கவனம் தீவிரமாக இருந்து வருகிறது. எனவே, தமிழக அரசின் தவறான மதுக் கொள்கையை எதிர்த்து கடுமையான போராட்டத்தை மகளிர் சமுதாயம் நடத்துகிற காலம் வெகு தொலைவில் இல்லை” என்று கூறியுள்ளார்.