வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்த ரிசர்வ் வங்கி! கானல் நீராக மாறும் மோடியின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார கனவு….

 

வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்த ரிசர்வ் வங்கி! கானல் நீராக மாறும் மோடியின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார கனவு….

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை இந்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதால், 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார பலத்தை எட்ட வேண்டும் என்ற மோடி கனவு நிறைவேற மேலும் பல ஆண்டுகள் ஆகும் என தெரிகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த கூட்டத்தில்தான் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ரிசர்வ் வங்கி முடிவு எடுக்கும். ரிசர்வ் வங்கியின் டிசம்பர் நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் முக்கிய கடனுக்கான (ரெப்போ ரேட்) வட்டியை குறைந்தபட்சம் 0.25 சதவீதம் குறைத்து பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.90 சதவீதமாக குறைக்கும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தனர். 

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ்

ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகந்த தாஸ் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார். அப்போது வட்டி குறைப்பு குறித்த தகவலை சக்திகந்த தாஸ் தெரிவிப்பார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி

மேலும், இந்த நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை 1.1 சதவீதம் குறைத்துள்ளது. அதாவது இந்த நிதியாண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் அளவுக்கே இருக்கும் என தற்போது கணித்துள்ளது. முந்தைய ஆய்வறிக்கையில் பொருளாதாரத்தில் 6.1 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என மதிப்பிட்டு இருந்தது. 

பொருளாதார  வீழ்ச்சி

பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை ரிசர்வ் வங்கி குறைத்திருப்பது, மோடியின் கனவான 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார பலத்தை நிர்ணயித்த காலத்துக்குள் எட்டுவது என்பது சாத்தியமில்லாதது என்பதை மறைமுகமாக சொல்லி விட்டது. 2024ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார பலத்தை இந்தியா எட்டும் என பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பல மத்திய அமைச்சர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். ஆனால் அந்த இலக்கை எட்ட வேண்டுமானால் குறைந்தபட்சம் 8 சதவீதத்துக்கு மேல் இருந்தால் மட்டுமே சாத்தியம். தற்போதைய வளர்ச்சி பார்க்கும்போது 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார பலத்தை எட்டுவதற்கு அதனை காட்டிலும் மேலும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருக்கும் போல் தெரிகிறது.