வல்லபாய் படேல் சிலை திறப்பு விழா: முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு

 

வல்லபாய் படேல் சிலை திறப்பு விழா: முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு

குஜராத்தில் நடைபெற இருக்கும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளும்படி முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: குஜராத்தில் நடைபெற இருக்கும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளும்படி முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்தவர் சர்தார் வல்லபாய் படேல். இரும்பு மனிதர் என அழைக்கப்பட்ட படேலுக்கு வரும் 31-ம் தேதி பிறந்தநாள். இதனையொட்டி அவரது சாதனைகளை போற்றும் வகையில் குஜராத்தில் அவருக்கு பிரமாண்ட சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. வல்லபாய் படேல் சிலையின் மொத்த உயரம் 182 மீட்டராகும். 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு உள்ள தீவில் இந்த சிலை கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலையை சுற்றி 12 சதுர கி.மீ. அளவுக்கு செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு சிலைக்கான தொடக்கப்பணிகள் ஆரம்பித்தன. இதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து  பெறப்பட்டது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்ட நிலையில், இந்த சிலையின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டில் இருக்கும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன..  

இந்த சிலை திறப்பு விழா வருகிற 31-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  குஜராத் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் வந்து அழைப்பு விடுத்தனர்.