வலுக்கும் சிஏஏ எதிர்ப்பு… சென்னை முழுவதும் ஆயிரக் கணக்கான போலீசார் குவிப்பு!

 

வலுக்கும் சிஏஏ எதிர்ப்பு… சென்னை முழுவதும் ஆயிரக் கணக்கான போலீசார் குவிப்பு!

இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தூண்டுதலின் காரணமாகவும் தவறான புரிதலின் காரணமாகவும் தான் என்றும் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கூறினார்.

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தூண்டுதலின் காரணமாகவும் தவறான புரிதலின் காரணமாகவும் தான் என்றும் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கூறினார். அதனால் முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ttn

இந்த போராட்டத்துக்குத் தடை  விதிக்க கோரி இந்திய மக்கள் மன்ற தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வரும் மார்ச் 11 ஆம் தேதி வரை போராட்டம் நடத்தக் கூடாது என்று கூறி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். ஆனால், எதிர் மனுதாரராக எங்களைச் சேர்க்காததால் இந்த தீர்ப்பு ஏற்கக்கூடியது அல்ல என்றும் அறிவித்த படியே போராட்டம் நடைபெறும் என்றும் இஸ்லாமிய அமைப்பினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ttn

இதன் காரணமாகச் சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் பகுதியில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், சென்னை முழுவதும் 10,000 போலீசார் குவிக்கப்படுவர். தலைமைச் செயலகத்தின் முன்பு 2,000 போலீசார் நிறுத்தப்படுவர் என்று தெரிவித்தார். மேலும், உயர்நீதிமன்ற தடையை மீறி பேரணி நடத்தினால் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும் மீறிச் செல்பவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். போராட்டத்தைத் தடுப்பதற்காக ஆயிரக் கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.