வர்த்தக சாம்ராஜ்யத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க தயாராகும் முகேஷ் அம்பானி….

 

வர்த்தக சாம்ராஜ்யத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க தயாராகும் முகேஷ் அம்பானி….

ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரான முகேஷ் அம்பானி தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மெகா கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி தனது 62 வயதிலும் இ காமர்ஸ் உள்ளிட்ட புதிய துறைகளில் ஆதிக்கம் செலுத்துவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார். மேலும், தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை நவீனமயமாக்க தனது உதவியாக தனது குழந்தைகளையும் களம் இறக்கி உள்ளார்.

ஆகாஷ்-ஈஷா அம்பானி

முகேஷ் அம்பானி-நிதா அம்பானி தம்பதிகளின் இரட்டை குழந்தைகளான ஈஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோர்  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின்  வர்த்தகத்தில் களம் இறங்கி விட்டனர். அதேவேளையில், அவர்களின் இளைய சகோதரர் ஆனந்த் அம்பானியும் விரைவில் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் அடுத்த பத்தாண்டுகளில் முகேஷ் அம்பானி தனது ரூ.3.55 லட்சம் கோடி செல்வ பொறுப்புகளை அடுத்த தலைமுறைக்கு (குழந்தைகளுக்கு) மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் எவ்வளவு பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை அடுத்த தலைமுறைக்கு மாற்றும் போது ஏற்படும் சில அபாயங்கள் குறித்தும் முகேஷ் அம்பானிக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர் தனது குழந்தைகளுக்கு வர்த்தக நெளிவு சுளிவுகளை நன்றாக கற்று கொடுத்து வருகிறார். 

ஆனந்த் அம்பானி

2014ம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் இயக்குர்கள் குழுவில் ஈஷா அம்பானியும், ஆகாஷ் அம்பானியும் நியமிக்கப்பட்டனர். மேலும், கடந்த டிசம்பரில் ஈஷா அம்பானிக்கு திருமணம் நடந்தது. கடந்த மார்ச்சில் ஆகாஷ் அம்பானிக்கு கல்யாணம் நடந்தது. ஆக, முகேஷ் அம்பானி ஒரு குடும்ப தலைவனாக தனது குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றி வருகிறார். அதேசமயம், கொஞ்சம் கொஞ்சமாக தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை தனது அடுத்த தலைமுறைக்கு கொடுக்க தயாராகி வருவதும் தெரிகிறது.

அதேசமயம் இது தொடர்பாக முகேஷ் அம்பானியோ, அவர்களது குழந்தைகளோ எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.