வரும் வெள்ளிக்கிழமை வரை பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து….

 

வரும் வெள்ளிக்கிழமை வரை பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து….

நிறுவனங்களின் கடந்த டிசம்பர் காலாண்டு முடிவுகள், அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் மேகம் உள்பட பல்வேறு விஷயங்கள் இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வரும் வெள்ளிக்கிழமை முதல் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் வரிசையாக வெளியிட உள்ளன. முதலில் வெள்ளிக்கிழமையன்று இன்போசிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஈரானின் முக்கிய தளபதியான சுலைமானியை அமெரிக்கா கொன்றதால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகம் ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்போசிஸ்

மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.102 லட்சம் கோடி மதிப்பிலான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த செயல் திட்டத்தை  தயார் செய்துள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள், கடந்த நவம்பர் மாத தொழில்துறை உற்பத்தி வரும் 10ம் தேதி வெளியாகிறது. தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் இந்த வாரம் மத்திய நிதியமைச்சரை சந்தித்து பேச உள்ளனர். ஜி.எஸ்.டி. சிஸ்டம் மற்றும் அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்வது குறித்து வரி ஆணையர்கள்  நாளை சந்தித்து பேச உள்ளனர்.

நிர்மலா சீதாராமன்

இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, சர்வதேச நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.