வரும் வாரம் பங்கு வர்த்தகத்தின் கதாநாயகன் காளையா? கரடியா?

 

வரும் வாரம் பங்கு வர்த்தகத்தின் கதாநாயகன் காளையா? கரடியா?

வரும் வாரம் இந்திய பங்குச் சந்தைகளின் போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். பருவமழை, மத்திய பட்ஜெட் உள்ளிட்ட காரணிகள் வரும் வாரத்தில் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும்.

2019-2020ம் நிதியாண்டுக்கான முழு மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை நிலவரம் முந்தைய வாரம் வரை கவலைக்குரியதாக இருந்தது. ஆனால் கடந்த வாரம் சில மாநிலங்களில் தனது கருணையை காட்டியது. இது பங்கு வர்த்தகத்துக்கு சாதகமான அம்சமாகும்.

பங்கு வர்த்தகம்

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். இதனால் வர்த்தக போர் குறித்து பதற்றம் குறைந்தது. அமெரிக்க வேலை வாய்ப்பு, மே மாத வர்த்தக பேலன்ஸ் டேட்டா, ஜூன் மாத வேலையில்லாதோர் குறித்த புள்ளிவிவரங்களை அந்நாடு இந்த வாரம் வெளியிடுகிறது. இந்த புள்ளிவிவரங்கள் சர்வதேச பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கூட்டமைப்பு நாடுகள் மற்றும் கூட்டணி நாடுகளின் 2 நாள் சந்திப்பு நாளை தொடங்குகிறது. அந்த கூட்டத்தில் நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பேரல்கள் அளவுக்கு உற்பத்தியை குறைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. கச்சா 6 முதல் 9 மாதங்கள் வரை எண்ணெய் உற்பத்தியை குறைக்க  சவுதி அரேபியாவிடம் ரஷ்யா சம்மதம் தெரிவித்து இருந்தது. அந்த கூட்டத்தில் எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக முடிவு எடுக்கப்பட்டால், அதனால் ஏற்படும் சப்ளை நெருக்கடியால் இந்தியா போன்ற நாடுகளுக்கு நெருக்கடியை கொடுக்கும்.

பங்குச் சந்தை

இதுதவிர , இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீடு, உள்நாட்டு அரசியல் நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்றவையும் வரும் வாரத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் எந்த திசையில் பயணிக்கும் என்பதை முடிவு காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.