வரும் வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்களின் கணிப்பு…..

 

வரும் வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்களின் கணிப்பு…..

நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள், கோவிட்-19 உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த இந்துஸ்தான் யூனிலீவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டெக் மகிந்திரா நிறுவனங்களின்  நிதிநிலை முடிவுகள் வரும் வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் என்.ஐ.ஐ.டி. டெக், டாடா காபி, யெஸ் பேங்க், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தங்களது மார்ச் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வரும் வாரம் வெளியிட உள்ளன.  முக்கிய துறைகளுக்கு ஊக்குவிப்பு நிதி தொகுப்பு குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்.ஐ.ஐ.டி.

லாக்டவுன் தொடர்ந்து 3வது முறையாக நீட்டிக்கப்பட்டநிலையில், பொருளாதார நடவடிக்கைள் நடப்பதற்கு ஏதுவாக நாட்டின் பல பகுதிகளில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் அதன் விளைவாக கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் மற்றும் சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த மாதம் வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்நாட்டில் ஒரு வாகனத்தை கூட விற்பனை செய்யவில்லை. இருப்பினும் தற்போது விதிமுறைகள் தளர்த்தபடுவதால் வாகன விற்பனை மற்றும் உற்பத்தி மீண்டும் இயல்பு நிலைக்கு படிப்படியாக திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1ம் தேதி முதல் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டப்படி உற்பத்தி குறைப்பு நடவடிக்கை தொடங்கின. இதனால் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

கச்சா எண்ணெய்

கடந்த வாரம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தனர். அதேசமயம் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளில் மேற்கொண்டியிருந்த முதலீட்டை அதிகளவில் திரும்ப பெற்றனர். எனவே உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிலைப்பாடு முக்கிய பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களும் வரும் நாட்களில் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.