வரும் நாட்களில் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு…

 

வரும் நாட்களில் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு…

கொரோனா வைரஸ் நிலவரம், நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இந்த வாரம் பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்சமயம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டி விட்டது. அமெரிக்கா-சீனா இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸை உருவாக்கியதே சீனாதான் என அமெரிக்கா குற்றச்சாட்டி வருகிறது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் சீனாவுடன் எந்தவொரு வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனை செய்யப்படாது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ்

3ம் கட்ட லாக்டவுன் இன்றோடு முடிவடைய உள்ளது. இந்நிலையில் லாக்டவுன் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் தளர்வுகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பார்தி ஏர்டெல், ஜி.எஸ்.கே. பார்மா, டெல்டா கார்ப்ஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் எதிர்வரும் நாட்களில் தங்களது மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட உள்ளன.

லாக்டவுன்

வங்கி அல்லா நிதிநிறுவனங்கள், மின் விநியோகம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ஆகியோரை இலக்காக கொண்ட 4ம் கட்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீடுக்கான உச்சவரம்பு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர சர்வதேச சந்தையில்  பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவை வரும் நாட்களில் பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.