வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு- நிர்மலா சீதாராமன்

 

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு- நிர்மலா சீதாராமன்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. சுமார் 16 ஆயிரத்து 500 பேர் கொரோனா வைரஸ் தாக்கதால் உயிரிழந்துள்ளனர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. சுமார் 16 ஆயிரத்து 500 பேர் கொரோனா வைரஸ் தாக்கதால் உயிரிழந்துள்ளனர். உலகையே அச்சுறுத்திய கொரோனா தற்போது இந்தியாவை ஆட்டிப்படைத்துவருகிறது. இந்தியாவில் சுமார் 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 10 உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்கள் தன்னலம் பாராது 24 மணிநேரமும் பணியாற்றி வருகிறார்கள். இதனால் சாமானிய மக்கள் முதல் பல பேரின் தினசரி வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்

இந்நிலையில் டெல்லியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன், “ஆதார் – பான் அட்டைகளை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டியை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி, சுங்கவரி போன்ற பல்வேறு கணக்குகளை தாக்கல் செய்ய தொழிற்துறைக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்ய ஜூன் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி 12 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரூ.5 கோடிக்கு கீழ் வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு எந்தவிதமான அபராதமும் கிடையாது.பெரும் நிறுவனங்களுக்கான அபராதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில் துறையினர் தெரிவித்த கருத்துகளையும் ஆராய்ந்து வருகிறோம். கொரோனா பாதிப்புக்கான நிவாரண நிதியை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும். அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் சேவைக் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்.பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் ஏதும் விதிக்கப்படாது. வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டும் என்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.